Tuesday, 29 December 2009

இப்படி சொன்னாலும் சொல்வார்கள் பிரபலங்கள்!


கடக்க இருக்கும் 2009ம் வருடத்தில் தங்களின் பங்கு பற்றி பிரபலங்கள்  இப்படிச் சொன்னால் எப்படியிருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை... சும்மா வந்து படிச்சுட்டுப் போங்க...

க‌லைஞர்: மிக‌ அற்புத‌மான‌ வ‌ருட‌ம்... தேர்த‌ல் வெற்றிக‌ளை விட‌ உளியின் ஓசைக்கு கிடைத்த‌ விருதைத்தான் பெருமையாக‌ நினைக்கிறேன். வ‌யித்து க‌டுப்பு வ‌ந்த‌வ‌ன் வாய்க்கு வ‌ந்த‌தெல்லாம் பேசுவா‌ங்க‌ற மாதிரி கோபால‌புர‌ம் வீட்டை த‌ன‌க்கு பிற‌கு இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ம‌னையா இருக்கும்னும், வ‌ர்ற‌ ஜூன் மாத‌த்தோட‌ ஓய்வு பெற‌ போற‌‌தாவும் உள‌றி கொட்டிட்டேன்... ந‌ல்ல‌வேளை கோபால‌புர‌ம் வீடு ப‌த்தி சொல்றப்ப எனக்குப் பிற‌குன்னு சொல்லிட்டேன்... ஓய்வு ப‌த்தி சொல்லும்போது வ‌ருஷ‌த்த‌ சொல்லாம‌ விட்டிருக்க‌னும்...

ஜேய‌ல‌லிதா: அருமையான‌ வ‌ருட‌ம்... இந்த‌ வ‌ருட‌த்தின் முக்கால்வாசியை தோழியோடு சேர்ந்து கொட நாட்டுல‌ கொண்டாடியாச்சு... கட்சியாவது, கூட்டணியாவது எல்லாம் மறந்து இய‌ற்கையை ர‌சித்து, ர‌சித்து போன‌ வ‌ருட‌ம்... ராமதாஸ விரட்டி விட்டாச்சு, மீதி பேர என்ன பேசினாலும் போகமாட்டேங்கறாங்க... அதுக்கு ஏதாவது வழி பண்ணனும்... மைனாரிட்டி திமுகா அர‌சு ம‌க்க‌ளை கொடுமை செய்கிற‌து... இதை மத்தியில் ஆளும் கையாலாகாத‌ அரசும் வேடிக்கைப் பார்க்கிறது... இதை நான் சும்மாவிடப் போவதில்லை...

தங்கபாலு: தலை தப்பிய வருடம்... 2009 முழுதும் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்ததே பெரிய சாதனை... இதிலிருந்தே தெரியவில்லையா இது எவ்வளவு சிறந்த வருடம் எனறு... அன்னை சோனியாஜியின் ஆலோசனையின்படி சத்தியமூர்த்திபவனில் வாஸ்துபடி மரத்தை வெட்டி சாந்தி செய்திருக்கிறேன்... இனி நான் தான் தமிழக காங்கிரஸின் நிரந்த‌ர தலைவர்...

ராமதாஸ்: கேவலமான வருடம்... வருடமா இது... பிச்சைக்காரனுக்கு பீட்ஸா போடர மாதிரி ஒரு எம்பியாவது கொடுத்திருக்க வேண்டாமா... 2008ல் எப்படியிருந்தேன் நான்... இதை நினைக்கையில் பத்திகிட்டு வருது... அதோடு விட்டதா, தண்ணியடிச்சவன் தரையில கிடந்த மாதிரி என்ன அம்போன்னு தனியா தவிக்க விட்டிருக்கிற‌ வருடம்... கடவுளே, என்னை யாரும் சீண்டிக்கூட பார்க்க மாட்டங்கறாங்களே, இப்ப‌ என்ன செய்யறதுன்னு தெரியலேயே...

திருமாவளவன்: கடுப்பான வருடம்... அடங்க மறுன்னு சொல்லிட்டு அலைஞ்சுகிட்டு இருந்தவனை அடக்கி காங்கிரசுக்கு கீழ‌ அடிமையாக்குன வருடம்... பத்தாதற்கு இந்த ராஜபக்சே வேறு கூப்பிட்டு கூட்டத்துல விட்டு கும்மியடிச்சி அசிங்கப்படுத்தி அனுப்பி விட்டான்... காறிதுப்பாத்து தான் பாக்கி... வெட்கக்கேடு... ஏதோ உல்லாசம் போன மாதிரி இலங்கைக்குப் போனதை தொடரா எழுதிகிட்டிருக்கிறது தான் சாதனை...

வைரமுத்து: புகழ்பாடிய  வருடம்... சென்ற வருடம் என்னை வென்ற வருடம்... மென்று தின்ற வருடம்... எதிரிகளை கொன்ற வருடம்... கலைஞர் என்னும் குடும்ப கொடையாட்சியின் கீழ் தமிழகம் செழித்த வருடம்... தமிழை புரட்டி புரட்டி போட்டு கலைஞரை பாராட்டி பாராட்டி என் வாயும், வயிரும் வலித்த வருடம்... அப்படியும் கலைஞரை அதிகம் பாராட்டியது யார் என்பதில் எனக்கு இரண்டாம் இடமே கொடுத்த கருமி வருடம்... இருமி இருமி தொண்டை வரண்ட‌ வருடம்...

ஜெகத்ரட்சகன்: பிரபலமான வருடம்... சும்மா கெடந்தவனுக்கு சுண்ட கஞ்சி கிடைச்சமாதிரி எனக்கு எம்பியும், மந்திரி பதவியும் கொடுத்த வருடம்... இதற்கு
கைமாறாக நான் கலைஞருக்கு போடும் பாராட்டு என்னும் ஜால்ரா மழையில் கோபாலபுரமே குதூகலத்தில் கும்மாளமிடுகிறது... கடும் போட்டிக்கு மத்தியில் நம்பர் ஒன் ஜால்ரா பட்டம் கிடைத்ததும் இந்த வருடத்தில் தான்... இந்த இடத்தை தாகக வைக்க வேண்டியது தான் இப்போதைய தலையாயப் பணி...

வாலி: வயிற்றெரிச்சல் வருடம்... கடந்த வருடம் கலைஞரை புகழ்வதிலும், எதிர்கட்சிகளை ஏளனம் செய்வதிலும் நான் தான் நம்பர் ஒன்... இந்த வருடம் அதை தட்டிப் பறித்து விட்டார்களே இந்த ஜெகத்ரட்சகனும், எனது பரம வைரியான வைரமுத்துவும்... என்ன செய்ய... புது வருடத்திலாவது 'பெண் சிங்கத்தை' கையில் எடுத்து இவர்களை பார்த்துவிடுகிறேன் ஒரு கை...


விவேக்: கண்டமான வருடம்... சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டிங்கற மாதிரி இந்த புவனேஷ்வரி மேட்டருல மைக்க புடிச்சி நிறைய மீட்டர் உட்டு மாட்டிகிட்ட வருடம்... இந்த பத்திரிக்கைகாரங்க என்னை எங்க பார்த்தாலும் ஊடு கட்டி அடிக்கிறாங்க... புவனேஸ்வரி வெளிய வந்து அவ தொழில் நல்லா விருத்தியாயிடுச்சி, ஆனா என் தொழில் படுத்துடும் போலிருக்கேடா சாமி...

புவனேஷ்வரி: வசூலில் சாதனைப்படைத்த வருடம்... என்னை காவல்துறை கைது செய்தாலும் செய்தார்கள் பாபுலாரிட்டி பவர் சோப் மாதிரி ஏறி, ஏக டிமாண்டு... தொழில் சூடு பிடிச்சி நிற்காமல் ஓடுது... கட்சியில வேற செர்ந்து அங்கேயும் களபணிய தொடங்கியாச்சு... இனி எல்லாம் வெற்றிதான்...

பாரதிராஜா: காரசாரமில்லா வருடம்... எந்த பிரச்ச்னையும் பெரிதாகி மேடை ஏறி மைக் பிடித்து யாரையும் திட்டவும் இல்லை... பாராட்டவும் இல்லை... கொந்தளித்து, கோபப்பட்டு நான் கொடுக்கும் பேட்டி தொலைகாட்சியில் வெளிவராத வருடம் ஒரு வருடமா... இதை என் இனிய‌ தமிழ் மக்கள் எ‍ப்படி ரசிப்பார்கள்...

வாசன்: காணாப்போன வருடம்... கேபினெட் அமைச்சரானதை தவிர வேறெதும் சொல்லிக்கொள்ளும்படியா இல்லாத வருடம்.. அப்பாவ மாதிரி பாக்கு போட்டு மென்னும் பார்த்துட்டேன்... எல்லோரும் ஒதுங்கியே போராங்க... இந்த பத்திரிக்கைகார‌ங்க கூட அப்பாவை கிண்டலடிச்ச மாதிரி ஒரு கார்ட்டூன் கூட என்ன வச்சு வரைய மாட்டங்கறாங்க...

அழகிரி: ஆப்பு வாங்குன வருடம்... அடங்காம திரிஞ்சுகிட்டிருந்த என்னை கொண்டாந்து கெமிக்கல் கொடுத்து உட்கார வைச்சுட்டாங்க... பாவிங்களா பார்லிமெண்டுல பக்கத்துல இருக்குறவன் என்ன பேசுறான்னே தெரிய மாட்டேங்குது... இதுல பதில் வேற சொல்லச்சொல்றாங்க... யாருக்கு யாருடா பதில் சொல்றது... ஏய், சிங்கத்த கொண்டாந்து இப்படி அசிங்கம் பண்ணிட்டீங்களேடா...

ஸ்டாலின்: செழிப்பான வருடம்... அண்ணனுக்கு அல்வா கொடுத்து டெல்லி அனுப்பி வைச்சுட்டு பதிலா எனக்கு துணை முதல்வர் பதவி வாங்கி கொடுத்த வருடம்... எப்படி மறக்க முடியும்... அடுத்த வருடம் அப்பா ரிட்டையர்டு ஆனதும் நான்தான் முதல் மந்திரி... அது வரைக்கும் கெமிக்கல் லீக் ஆகாமப் பார்த்துக்கனும்...

கனிமொழி: அல்வா கொடுத்த வருடம்... டெல்லியில மந்திரியாயிடனும்னு அப்பாவை சக்கர நாற்காலியில வச்சு தள்ளிகிட்டு டெல்லி முழுதும் சக்கரமா சுத்தினது பார்த்து ஊர் எல்லாம் சிரிச்ச வருடம்... கடைசியா சோனியாஜி பான்பராக் கொடுத்து அனுப்பி வைச்சுட்டாங்க... இனி தமிழ் ஈழத்தப் பத்தியும் அதிகமா பேசியும் நூல் விட முடியாது... கஷ்டம்தான்...


கார்த்திக்: டவுசர் கழண்ட வருடம்... காணாமற்போனவன கூப்பிட்டு கல்ல‌ மிட்டாய் வாங்கி கொடுத்த கதையா சும்மாயிருந்தவன தூண்டிவிட்டு கட்சி ஆரம்பிக்க வச்சு காணாம பண்ணிட்டாங்க... தொப்பியை கழட்டி தூரவீசிட்டு மறுபடியும் நடிக்க ஆரம்பிச்ச வருடம்.. கட்சியை கடவுள் தான் காப்பத்தனும்...

ரஜினி: குழப்பும் வருடம்... போன வருஷ‌ம் நம்ம விட்டு போன வருஷம்... வர்ற வருஷம் இனுமே வரப்போற‌ வருஷம்... போனது போனதுதான்... வர போறதும் போகப்போற வருஷம் தான்... என்ன குழம்பிட்டீங்களா... குழம்புனா தான் தெளிவு கிடைக்கும்... நல்லா குழம்புங்க... அடுத்த வருசம் பெண் சிங்கம் நூறாவது நாளுக்கு கூப்பிடுவாங்களே, அங்க போய் என்ன பேசற‌துன்னு பாபாஜிதான் சொல்லனும்...

கமல்: சர்வதேசம் இல்லாத வருடம்... இங்க யாரும் சர்வதேச தரத்தோட படம் எடுக்கறதில்லை... எல்லாம் குப்பை... நம்ம நிறைய ஆங்கில படம் பார்க்கனும்... நாம் ஜேம்ஸ் காமரூனுக்கும், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குக்கும் இணையா படம் எடுக்கனும்... சர்வதேச கலாச்சாரத்தோட இருக்குற என் வாழ்க்கையை இங்க கண்டபடி பேசறாங்க... அது மாறனும்... நான் மாத்துவன்... அது தான் எனக்கு நல்ல வருஷம்...

விஜய்: கட்டம் கட்டிய வருடம்... கட்சி ஆரம்பிக்கிறேன்னு சொல்லி வாயதொறந்து, வாயில வாய்புண்ணு வந்தது தான் மிச்சம்... இந்த ராகுல்காந்தி வேற இங்க வந்து கடுப்பேத்திட்டு போயிட்டார்... வேட்டைக்காரனும் கோட்டைவிட்டுருச்சு... இப்படியே போன மூட்டை தூக்க வேண்டியதுதான்...

சரத்குமார்: கடை காலியான வருடம்... பார்லிமெண்ட் தேர்தல்ல 812 வாக்குகள் வாங்கி, நான் எவ்வளவு பெரிய பில்டப் பார்டின்னு மக்களுக்கு நிருபிச்ச வருடம்... கட்சியை காலி செய்துவிட்டு அப்பாவின் காலில் விழுந்து இந்த வருசத்திலேயே ஆசிர்வாதம் வாங்கமுடியலேயேங்கறது தான் பெரிய‌ வருத்தம்...

விஜய்காந்த்: புலம்பல் வருடம்... காங்கிரஸ் எனக்கு விலை பேசுகிறது... நான் அதற்கெல்லாம் மசியமாட்டேன்... யாரோடையும் கூட்டணியில்ல... மக்களோடயும், கடவுளோடையும் தான் கூட்டணி... என்னோட கூட்டணி வைக்கனும்ன தப்புபண்ண மாட்டேன்னு எழுதி என்கிட்ட கையெழுத்துப் போட்டு கொடுங்க... மக்களோட நலனுக்காக இப்ப கூட்டணி வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்... நான் சொன்னா சொன்னதுதான்... சொல்லாதது சொல்லாததுதான்..

வைகோ: சட்டை செய்யாத வருடம்... தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இந்த வருடம் எத்தனை முறை கைதானேன் என்பதை கண‌க்கெடுக்க ஆளில்லாத வருடம்... தட்டிகேட்க பேரில்லாத‌ வருடம்... பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார்... நான் அம்மா கூட்டணியில் தான் இருக்கிறேன்... கலைஞர் நாடகமாடுகிறார்... சேதுசமுத்திர திட்டம்... முல்லை பெரியார் பிரச்சனை.. ஐய்யய்யோ... சம்மந்தமில்லாம பேச ஆரம்பிச்சுட்டேனே... இது எங்க போய் முடியுமோ தெரியலயே...

3 comments:

Anonymous said...

ssssssssuuuuuppperrrrrrrrrrrr......

Anonymous said...

nice and hilarious

yasavi.blogspot

angel said...

very nice