Tuesday 8 December 2009

நிர்வாகம் என்னும் மந்திரசக்தி



நிர்வகிக்கும் மனிதருக்கும் நிர்வாகத்திற்கும் நிறையவே சம்மந்த மிருக்கிறது... குதிரை பூட்டிய தேருக்கும் சாரதிக்கும் இருக்கும் உறவு தான் அது... அன்றாடம் பார்த்து பார்த்து பழகிப்போன சில விசயங்கள் அல்லது வேலைகள் இப்படித்தான் அதிகபட்சம் இருக்குமென்று நாம் நினைத்துக் கொண்டிருக்கையில் அது அப்படியே தலைகீழாக மாறினால் எப்படி இருக்கும்... இப்படியும் மாற்ற முடியுமா என்ற பிரமிப்பு நிகழ்ந்தால், அந்த நிகழ்வுக்கு காரணமானவர் எப்படிப் பட்டவராக இருக்க வேண்டும்... அப்படிப்ப‌ட்டவரிடம் நாம் கற்றுக்கொள்ள ஏதாவது விசயம் இருக்க வேண்டும் தானே... ஆம் இருந்தது.. நிர்வாகம் என்பது அவ்வளவு லேசுப் பட்டது இல்லை தான் என்றாலும் அதை நாம் கையாலும் விதத்தில் கையாண்டால் அது ஒளிரும்... தூண்ட தூண்ட துளிரும்... மீட்ட மீட்ட மிளிரும்... எந்த எல்லையும் தொடக் கூடியது தான் என்கிற நம்பிக்கையை தரும்... அப்படி தந்தார் ஒருவர்...

நான் நான்கு வருடங்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்த அதே அலுவலகம்... இப்படித்தானிருக்கும் என்ற ரீதியில் இருந்த அலுவலக பணிகள்...அடுத்த ஒன்றரை வருடத்தில் ஒன்றும் பெரிய மாற்றமில்லை... அப்போது எங்கள் துறைக்கு புதிதாக தலைமையேற்றார் அவர். 'இவர் பெரிசாக என்ன செய்துவிடப் போகிறார்... பத்தோட பதினொன்று...' என்கிற ரீதியில் அப்போது பார்த்தார்கள்... அலட்சியமாய் பேசினார்கள்... வந்தவர் கொஞ்ச நாட்கள் அமைதியாய் கவனித்தார்... ஒவ்வொருவரையும் ஊடுருவினார்.. யார் எங்கே, என்ன, எப்படி என்று எடை போட்டார்... சில மாத‌ங்கள் விட்டு விஸ்வரூபமெடுத்தார்... எந்த பிரச்சனையையும் இடையில் யாருமின்றி நேரில் சந்தித்தார்... சம்மந்தபட்ட சதாரண ஊழியரையும் அழைத்து விவரம் அறிந்தார்... பிரச்சனைக்கு தீர்வு சொல்லி தீர்க்க நாள் குறித்தார்... குறித்த நாளில் முடிக்காதவர்களை திணறடித்தார்...



கொஞ்சம் கொஞ்சமாக விபரீதத்தை உணர்ந்தது அலுவலகம்... வந்திருப்பவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பவர் இல்லை, கேட்டுக் கொண்டிருக்க‌ச் சொல்லிவிட்டு சொல்பவர் என்று புரிந்தது... தப்பிக்க வழி, சொன்னதை செய்து முடிப்பது தான் என்ற நிலையை எட்டியது... அடுத்த ஒரு சில மாதங்களில் யார் யார் என்ன செய்யகிறார்கள்... அவர்களால் என்ன செய்ய முடியும்... எங்கே செய்ய முடியும்... எப்படி செய்ய முடியும் என்பது இவர் மூளைக்கு எட்டியதும் இவருக்கு பதவி உயர்வு கிட்டியது. மெதுவாக ஒவ்வொருவருடைய பதவியும், இடமும், வேலையும் மாறியது. புதிதாக சிலர் வந்தார்கள்.. ஆக்ரமித்தார்கள்.. எல்லோரும் மிரண்டார்கள்.. அலறினார்கள்... வேலை சொன்ன நேரத்தில் முடிந்தது.. இதுவே பழகிப்போனதும் தடைகள் தானாக உடைப்பட்டன. இப்போது அவருக்கு அடுத்த பதவியும் வந்து சேர்ந்தது.. சில வருடங்களுக்கு முன் இதே அலுவலகத்தை பார்த்தவர்கள் இப்போது பார்த்தால் நிச்சயம் மிரண்டு போவார்கள்... பெரிய பிரமிப்பு வருவது தவிர்க்கவோ, மறுக்கவோ முடியாதது.

சரி இதை நான் இங்கே எழுத காரணம் இருக்கிறது... நாம் எதையும் பார்க்கும் பார்வையில் தான் வெற்றியின் சதவீதம் இருக்கிறது. நம் பார்வை விசாலமானால் அதன் பலன் நிச்சயம் என்பதை கூறத்தான். இவரின் நிர்வாகம் எனக்கு தெளிவுபடுத்திய சில விசயங்களை பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரை. நிர்வாகம் பற்றி நான் தெளிவு கண்ட‌ சில‌ விச‌ய‌ங்க‌ள்...



1. முத‌லில் அலுவ‌ல‌க‌ சூழலை, அங்கு நடக்கும் செயல்களை தெளிவாக‌ ஆனால் அவ‌ச‌ர‌மாக  ஆராய்ந்து அறிந்து தெரிந்து கொள்ள‌ வேண்டும்.

2. சுற்றி இருப்ப‌வ‌ர்க‌ளை பார்த்து பேசி ப‌டிக்க‌ வெண்டும். அவ‌ர்க‌ளின் த‌குதி என்ன‌, வேக‌ம் என்ன‌, ந‌ம்பிக்கையின் எல்லை எவ்வ‌ள‌வு என்று புரிந்து கொள்ள‌ வேண்டும்.

3. பிர‌ச்ச‌னை என்கிறப‌ட்ச‌த்தில் இடையிலிருப்ப‌வ‌ர்க‌ளை விடுத்து அதில் ச‌ம்ம‌ந்த‌ப‌ட்ட‌வ‌ர்க‌ளை நேரில் தீர‌ விசாரிக்க‌ வேண்டும்... அப்போது எந்த இட‌த்தில் முடிச்சு இருக்கிறது என்பது தெளிவாக தெரிந்துவிடும்.

4. பிரச்சனைக்கு யாரையும் குறை கூறாமல் அதற்குறிய தீர்வை மிக தெளிவாக கூறி, அதை தீர்க்க யாரால் முடியும் என்றறிந்து அவரை உதவிக்கு தந்து முடிக்க நாள், நேரம் குறிக்க வேண்டும்.

5.எல்லா வசதியும் செய்து தந்தும் குறித்த தேதியில் வேலையை முடிக்காதவர்களை கூப்பிட்டு உரிய கரணம் கேட்க வேண்டும், கிடைக்காத பட்சத்தில் அவர்களை கொஞ்சம் அதிகமாகவே கண்டிக்கவேண்டும்.

6. கொஞ்சம் கொஞ்சமாய் யார் யார் எந்த வேலைக்கு சரியானவர்கள் என்று பார்த்து அவர்களை அங்கு மாற்றியமைக்க வேண்டும். தேவையென்றால் புதிதாக ஆட்களை எடுக்க வேண்டும்.

7. நெருக்கடி நேரத்திலும் ஊழியர்களை விட்டு கொடுக்காமல், வேலையை விட்டு தூக்கிவிடாமல் கரிசனம் காட்டவேண்டும். தகுந்த நேரத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, பாராட்டு தந்து உற்ச்சாகப்படுத்த வேண்டும்.

8. குறைகூறுபவர்களை, பாதிக்கப்பட்டவர்களை கூப்பிட்டு பேச வேண்டும். நிலமையை விளக்கி 'உனக்காக நான் இருக்கிறேன்' என்று நம்பிக்கையை அவர்களுக்கு அளிக்க வேண்டும்.

9. வேலையில் எந்த இடத்தில் முன்னேற முடியாமல் தடை வருகிறதோ அப்போதே எந்த தயக்கமமுமின்றி தன்னிடம் வரலாம் என்பதை எல்லொருக்கும் புரிய வைக்க வேண்டும்.

10. கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு கீழிருப்பவர்களிடம் தன் பொறுப்புகளை ஒப்படைத்து, அவர்களை வழி நடத்திய படியே தான் அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேண்டும்.

மேலே இருக்கும் 10 விசயங்களிலும் உங்களுக்கே தெரியாமல் ஹென்றி பயோலின் (Henri Fayol)  நிர்வாகம் பற்றிய குறிப்புகளும் (திட்டமிடல் (planning), ஒழுங்கமைத்தல்(organizing ), ஆணையிடுதல்(commanding ), இயைபாக்கல்(co-ordinating), கட்டுப்படுத்தல்(controlling)) மற்றும் மேலும் சிலரின் குறிப்புகளும் (ஊக்கப்படுத்தல் (motivation), நெறிப்படுத்தல் (directing), ஊழியரிடல் (staffing)) மறைந்திருப்பது வெளிப்படையாகவே தெரியும்.

இது போதும் நீங்கள் ஒரு நிர்வாகியாக வெற்றி பெற... முடிந்தால் முயன்று பாருங்களேன்.

      1 comment:

      பிரேம்குமார் அசோகன் said...

      அருமை. கட்டுரை தொய்வில்லாமல் செல்கிறது. வாழ்த்துக்கள்!!