Sunday 14 February 2010

நடந்தது என்ன - மூன்றாம் பாகம்!


இந்த தொடர் கட்டுரை யாரையும், எதையும் நம்ம வைக்கவோ, எதுவோ இருக்கிறது என்று கூறுவதற்க்காகவோ, வலியுறுத்துவதற்க்காகவோ இல்லை... இதெல்லாம் எனக்கு தெரிந்து, என் முன்னால் நடந்தவை... அந்த பிரமிப்பை பகிர்ந்து கொள்ளவே இங்கே எழுதுகிறேன்... என்ன நடந்ததோ அந்த விசயங்கள் எப்போதும் போலவே விவாத மேடையின் விவாத கருவாகவே இருந்து விட்டுப் போகட்டும்... நான் தொடர்ந்து இந்த விசயத்தை நம்பாதவனாகவும், நம்பாமல் இருக்க முடியாதவனாகவும் தான் இருக்கிறேன். 

எங்கள் குடும்ப நண்பர் அவர்... ஒரு மேடை நாடக நடிகர். அவருடைய வீட்டில் நடந்த சம்பவம் ஒன்று. அவரின் இரண்டாவது பெண்ணிற்கு அப்போதுதான் திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகியிருக்கும்... அப்போது தன் தாய் வீட்டுக்கு வந்திருந்த அந்த பெண்ணிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனது... அதாவது  
உடம்பு வெட்டி வெட்டி இழுக்கும்... அந்த பெண் சுய நினைவை இழந்துவிடுவாள்... ஏதேதோ கத்துவள்... கொஞ்ச நேரம் அப்படியே இருக்கும், சிறிது நேரத்தில் எல்லாம் சரியாகி சுயநினைவு வந்து சகஜ நிலைக்கு வந்து விடும் அந்த பெண்... இது இடைவெளி விட்டு தொடர்ந்து வந்து கொண்டிருந்தது... நண்பர் பெண்ணை மனநல மருத்துவர் மற்றும் நரம்பியல் மருத்துவரிடன் காட்டினார்... அவர்கள் பரிசோதித்துவிட்டு எந்த நோயும் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என்று கூறி விட்டு மன நிறைவிற்காக சில மருந்து மாத்திரைகளை பரிந்துரைத்தார்கள்... ஆனாலும் அந்த பெண்ணிற்கு தொடர்ந்த இடைவெளியில் அந்த இலுப்பும் அதை தொடந்த விசயங்களும் நடந்த வண்ணமே இருந்தது... ஒரு சில மாதங்களிலேயே நிலமை இன்னும் விபரீதமாய் போய் தொடர்ந்து வர ஆரம்பித்தது... கூடவே உடம்பெல்லாம் எரிவதாக கூறி அந்த பெண் அழுது கொண்டே ஆடைகள் முழுவதையும் அவிழ்த்து எறிய‌ தொடங்கினாள்... ஆம்பளைகள் யாரும் அவர் வீட்டுக்குப் போக முடியவில்லை... நிலமை மோசமாகிகொண்டு போனது... என்ன செய்வது என்று தெரியவில்லை... நண்பர் மிகவும் மன உளைச்சலில் இருந்தார்.

அந்த நேரத்தில் தான் ஒரு நபர் ஒரு மந்திரவாதியை பரிந்துரை செய்தார்... எங்களுக்கு அதில் நம்பிக்கையில்லை என்றாலும் என் நண்பருக்கு வேறு வித யோசனை... எதை தின்றால் என்ன, பித்தம் குறைந்தால் சரிதானே என்பது அவர் எண்ணம்... அவரின் நிலமை அப்படி ஒரு இக்கட்டில் இருந்தது... சரி அதையும் பார்த்து விடலாமே என்று அந்த மந்திரவாதியை அழைத்து வந்தோம்... அவர் கேட்ட பூஜை சாமான்கள் அனைத்தும் வாங்கியாயிற்று... அதில் ஒரு உயிர் கோழியும், குவாட்டர் பிராந்தியும் அடக்கம்... பூஜை தொடங்கியது... அவருக்கு எதிரே அமர்ந்திருந்தது அந்த பெண்... மந்திரவாதி மந்திரங்கள் சொல்லியபடி நெருப்பில் சாம்பிராணியைப் போட, கூட வந்தவர் அதற்கு தகுந்தாற்போல் உடுக்கடித்தார்... சிறிது நேரத்தில் இடம் புகை மண்டலமானது... மந்திரமும், உடுக்கு சத்தமும் சூழ்நிலையை இருக்கமாக்கியது... மந்திரவாதி அதட்டியப்படி அந்த பெண்ணிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தார்... அந்தப்பெண் அசரவில்லை, இவரை மதிக்கக்கூட இல்லை... மேலும் முயன்ற அவர் கோபம் கொண்டவராக பையிலிருந்து அதை எடித்தார்... அது தோலினால் ஆன சாட்டை... 'யார் நீ... எங்கிருந்து வந்திருக்கிறாய்... உனக்கு என்ன வேண்டும்... பேசாதவரை உன்னை விட மாட்டேன்...' என்றபடி சாட்டையால் அடிக்க ஆரம்பித்தார்... 


சுற்றி வேடிக்கைப் பார்த்த கூட்டம் பயந்து மிரண்டு போனது... அடிக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அந்த பெண் பேச ஆரம்பித்தாள்... ஏதோ ஒரு ஊரைச் சொல்லி அந்த ஊரிலிருந்து வந்ததாகவும், ஏதோ ஒரு பெயரை சொல்லி அது தான் தன் பெயர் என்றது. எங்களுக்கு எதுவும் புரியவில்லை... பின் விசாரித்தப்போது, அந்த பெண்ணின் திருமணத்தின் போது, நண்பரின் உறவினர் பெண் ஒருவர் அந்த ஊரில் இருந்து வந்தது தெரிய வந்தது... அந்தப் பெண்ணும் அங்கேயா இருந்ததால், கூப்பிட்டு விசாரித்ததில் கிடைத்த அதிர்ச்சியான தகவல் இது... அந்த பெண் இருந்த ஊரில், இந்த பெண்ணின் வீட்டுக்கு அருகில் சமீபத்தில் ஒரு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாம்... அந்த பெண்ணின் பெயரும், பாதிக்கப்ப்ட்ட பெண் சொன்ன பெயரும் ஒன்றாக இருந்தது... மேலும் அந்த உறவுகாரப் பெண்ணின் மூலமாகத்தான் இங்கு வந்ததாகவும் மந்திரவாதியிடன் சொல்லிக்கொண்டிருந்தது நண்பரின் மகள்... அந்த உறவுகாரப் பெண்ணிற்கு இதை கேட்டு அதிர்ச்சி. அந்த சம்பவத்தை இங்கு யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பகிர்ந்துகொள்ளவேவில்லை என்றும் அடித்து பேசினார் அவர். 'இங்கிருந்து போய்விடு...' என்று மந்திரவாதி  மீண்டும் சாட்டையால் அடிக்க ஆரம்பித்தார்... ஆரம்பத்தில் அடம்பிடித்த அந்த பெண், அடி அதிகமாகவே இங்கிருந்து சென்றுவிடுவதாக ஒத்துக்கொண்டு, ஊர் எல்லையில் கொண்டு வ‌ந்து விடச் சொன்னாள்... ச‌ரி என்று ச‌ம்ம‌தித்த‌ மந்திரவாதி, கிழம்பச்சொன்னார். 

உடனே எழுந்து ஓட ஆரம்பித்தது அந்த பெண்... பின்னால் சாட்டையுடன் மந்திரவாதி ஓடினார்... அவர்கள் பின்னால் ஊரே ஓடியது... சரியாய் அந்த கிராமத்தின் எல்லைப்பகுதி வந்தவுடன் அந்த பெண் நின்றது... தனக்கு சேர வேண்டியதை கேட்டது... உடன் மந்திரவாதி பிராந்தி பாட்டிலை கொடுத்தார்... அதை வாங்கிய அந்த பெண் அசால்ட்டாக திறந்து கடகடவென குடித்தாது... அடுத்து கோழியை வாங்கி அதன் கழுத்து பகுதியை வாயால் கடித்து தலையை துண்டாக்கியது... பின் அதன் ஒரு பகுதியிலிருந்து கொட்டிய ரத்தத்தை அப்படியே குடித்தது... திடீரென 'வீல்..' என்ற பெரிய அலறல் சத்தம். அடுத்த வினாடி அந்த பெண் மயங்கி கீழே விழுந்து விட்டாள்... பிறகு அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப, மெதுவாக எழுந்த பெண் கேட்ட கேள்வி இருக்கிறதே.. அது.. 'நான் ஏன் இங்கே வந்தேன்... இங்கே ஏன் இவ்வளவு கூட்டம்... என்ன நடக்குது இங்கே...' என்பது தான். 'ஆள உடும்மா தாயே...' என்று எல்லோரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்... அதற்குப் பிறகு அந்த பெண்ணிற்கு இன்று வரை அந்த பழைய பிரச்சனை வரவே இல்லை... இப்போது சொல்லுங்கள், நடந்தது என்ன...?

Saturday 13 February 2010

அது நானாகவும் இருக்கலாம் - காதலர் தின கவிதை


நீ தேடிக்கொண்டிருப்பவன்
ஒருவேளை 
நானாகவும் இருக்கலாம்!

6 அடி 2 அங்குல உயரம்
விரிந்த நிலையில் 
மார்பு 40 இஞ்சும் 
சுருங்கிய நிலையில்
45 இஞ்சும் கொண்டவன்!

மயில் கழுத்து வண்ணத்தில்
தமிழுக்குப் பிடித்த நிறம்
வட்டமேஜை மாநாடு போடுமளவுக்கு 
வட்டமான முகம்!

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
காமப் பருக்களுடன் 
களைக்கட்டியிருக்கும் கன்னம்
புருவம் உயர்த்தி பார்க்க வைக்கும்
ப‌ருவத்துடன் கணகள்!

வா வ‌ந்து முத்த‌மிடு என்ற‌ழைக்கும்
ரோஜா இதழ்கள் அரைத்து
செய்யப்ப‌ட்ட தடித்த‌ உதடுகள்
அடுத்த‌வ‌ர் ஆசைப்ப‌டும் அள‌வுக்கு
அடர்த்தியான முரட்டு மீசை!
திஷ்டிப் படுமளவுக்கு 
புஷ்டியான உடல்வாகு!

அழ‌கான‌ பெண்க‌ளை பார்த்து ரசிப்பது
ஆன‌ந்த‌ விக‌ட‌னை ப‌டித்து முடிப்ப‌து
பொதுவான‌ பொழுதுபோக்கு!

படித்த அளவுக்கு வேலை
குடிக்க அழைக்கும் ஊதியம்
வாடிக்கையாய் சினிமா பார்ப்ப‌தும்
வேடிக்கையாய் சிரித்து பேசுவ‌தும்
கூட பிறந்த பிறப்பு!

இப்போதே பார்த்துச்சொல் 
நீ தேடிக் கொண்டிருப்ப‌வ‌ன் 
ஒருவெளை
நானாக‌வும் இருக்க‌லாம்!

Thursday 11 February 2010

நடந்தது என்ன - இரண்டாம் பாகம்!


கிராமத்தில் எங்கள் வீட்டிலிருந்து 500 மீட்டரிலேயே இருக்கிறது எங்களுடைய  வயல்... அங்கே பம்ப்செட் உள்ளது... அதை சுற்றி தென்னை மரங்களும், மாமரமும் நிறைந்த இடம்... நடுவே கீற்றுக் கொட்டகை...சுற்றிலும் வயல் வெளி... தண்ணீர் ஊற்றும் இடத்தில் பெரிய தொட்டி... ரம்மியமான சூழல்... கிறங்கடிக்கும் காற்று... கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை... அது ஒரு சொர்க்கம்... உச்சிவெயில் வேலைகளில் அங்கு சென்று தண்ணீர் தொட்டியில் விழுந்து புரள்வது வழக்கம்... நேரம் காலம் தெரியாமல் தண்ணீரில் மிதப்பதும், தத்தளிப்பதும் (துண்டு கட்டிக்கொண்டு தானே என்று கேட்பதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது) சுகமான அனுபவம்... அப்படி  நினைத்து தான் உச்சி வெயில் வேளையில் அங்கு தனியாக வந்து விட்டேன்... அப்போது தாலாட்டாக வீசிய தென்றலில் மயங்கி, சிறிது நேரம மோட்டார் கொட்டகையில் கிடந்த கட்டிலில் படுத்தேன்... (கட்டிலில் படுப்பதும் ஒரு சுகம் தான்... நம்மை அப்படியே உள் வாங்கிகொண்டு அனைத்த‌படியே... அடடா...).

எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை, அந்த சம்பவம் நடந்த போது தான் முழிப்பு வந்தது... உறக்கம் லேசாக கலைகிறது... யாரோ உள்ளே நுழைவது போல் ஒரு உணர்வு...அடுத்த சில வினாடிகளில் என் உடம்பை ஏதோ ஒரு சக்தி அமுக்குகிறது...எனக்கு நன்றாக நினைவு வந்து விட்டது... கண்களை திறந்து பார்க்கிறேன்... திரக்க முடியவில்லை... முகத்தை திருப்பப் பார்க்கிறேன்... முடியவில்லை... உடம்பின் மேல் மேலும் பாரம் அதிகமாகிறது... என்க்கு கைகளை அசைக்க முடியவில்லை... கால்களை அசைக்க முடியவில்லை... சத்தம் போடலாமா என்று முயற்ச்சித்துப் பார்க்கிறேன்... ம்ம்ம்... அதுவும் முடியவில்லை... என் உடம்பு என் கட்டுப்பாட்டில் இல்லை என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது... ஆனால் உணர்வு இருக்கிறது... நினைவு இருக்கிறது... நடப்பது தெரிகிறது, ஆனால் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை...  இத்தோடு நம் கதை முடிந்தது என்று தான் நினைத்திருந்தேன்... ஆனால் சரியாக 2 அல்லது 3 நிமிடங்களுக்குள் 'சலேர்' என ஏதோ விடுபடுகிறது... உடம்பு அசைவுக்கு வருகிறது... முகத்தை திருப்ப முடிகிறது.

உடனே எழுந்து உட்கார்ந்தேன்... உடம்பு முழுதும் வியர்வை ஆறாக ஓடுகிறது... மனது தடதடக்கிறது... உடம்பில் சிறு உதறல்... அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட தாமதிக்க வில்லை நான்... எழுந்து கொட்டகையை விட்டு வெளியே வந்து, ஓட்டமும், நடையுமாக திரும்பிப் பார்க்காமல் வீடு வந்து சேர்ந்தேன்... வந்த பிறகுதான் தெரிந்தது நான் எவ்வளவு வேகத்தில் வந்திருக்கிறேன் என்பது... என் முகத்தைப் பார்த்தவர்கள் துக்கம் விசாரிப்பது போல் விசாரித்தார்கள்... நடந்ததை சொன்னேன்... அதற்கு முன் அங்கு நிலவிய ஒரு நம்பிக்கையை சொல்லியாக வேண்டும்.


எங்கள் வீட்டுக்கு எதிரே வயலுக்கு பக்கத்தில் மூங்கில் குத்துக்கள் நிறைந்த காடு போன்ற பகுதி இருக்கிறது... அதற்குள்ளே இருந்த ஒரு பூவரசு மரத்தில் அதற்கு சில வருடங்களுக்கு முன் ஒரு கன்னிப்பெண் தூக்குமாட்டி இறந்து போனாள்... அதன் பிறகு இரவு நேரங்களில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச செல்கிறவர்கள் பல சம்பவங்களை கூறுவார்கள்... அதில் சில... இரவு நேரத்தில் வரப்புகளில் நடந்து செல்லும் போது, கொஞ்சம் முன்னால் யாரோ நடந்து போவது போல் தெரியுமாம்... கூப்பிட்டுப் பார்த்தால் யாரும் இருக்க மாட்டார்களாம்... சில வேளைகளில் வாய்க்கால் முழுவதும் மண்டிகிடக்கும் கோரைகள் விலக விலக யாரோ நடந்து செல்வது மாதிரி தெரியுமாம்... அதை விட நான் கண்கூடாகப் பார்த்தது, இரவு நேரங்களில் நாய்களும் வயலுக்கு வருவதுண்டு... அப்படி ஒருநாள் பின்னால் வந்த கொண்டிருந்த‌ நாய் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு வந்த உடன் வேகமாக குறைத்துக் கொண்டு முன்னால் பாய்ந்து சென்றது... யாரோ முன்னால் செல்வது போலவும், அவர்களை துரத்துவது போலவும் இருந்தது அந்த செயல்... பின் திடீரென யாரோ துரத்துவது போல பயந்து போய் பின்னால் வருகிறது... மீண்டும் குறைத்துக்கொண்டு முன்னால் செல்வதும், பின்னால் வருவதுமாக ஒரு குறிப்பிட்ட தூரம் வரை துரத்தி சென்று விட்டு விட்டு தான் திரும்பியது... நிச்சியமாக அங்கு யாரும் இல்லை என்பது எவரெடி டார்ச் லைட்டில் நன்றாக தெரிகிறது... யோசித்துப்பாருங்கள்... அந்த நேரத்தில் மனுசனின் மன நிலையை.

ஊரில் இப்போது எல்லோரும் தெளிவான முடிவுக்கு வந்திருந்தார்கள்... அதாவது என்ககு நடந்ததற்கும் இதற்கும் சம்மந்தம் இருக்கிறது என்பது போல்... (இதை எழுதி விட்டு இன்று இரவு எப்படி தூங்கப்போகிறேன் என்பது தான் மனதுக்குள் இருக்கும் கவலை... இப்பொது நேரம் இரவு 11 மணி) அன்றிலிருந்து பம்புசெட்டுக்கு செல்வதை அடியோடு ஒழித்தேன்... குளிப்பதாவது மண்ணாவது, ஆளில்லாமல் அந்த இடத்தை அண்ணாந்து கூட பார்ப்பதில்லை... (இதையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்துவதில்லை கிராமத்தில் வாழும் மனிதர்கள்...). அடுத்த சில வருடங்களில் நான் சென்னை வந்து விட்டேன்.. திருவல்லிக்கேணியில் தனி அறை எடுத்து த்ங்கியிருந்தேன்... அங்கேயும் ஒருநாள் அதே போல் மீண்டும் அந்த சம்பவம் நடந்தது... (கிராமத்தில் இருந்த பெண் எப்படி இங்கு வந்திருப்பாள்...) இந்த முறை என்னால் இன்னும் தெளிவாக உணர முடிந்தது... நன்றாக தூங்கிக் கொண்டிருந்த என்க்கு காற்றைப்போல் யாரோ உள்ளே நுழைவது போனறு தெரிகிறது... உணர முடிகிறது... பிறகு முன்னால் சொன்னது அப்படியே நடக்கிறது... இந்த முறை இஷ்ட தெய்வமான அனுமாரை வேண்டி கொள்வதைத் தவிர வேரெதுவும் செய்ய முடியவில்லை. 

அதன் பிறகு நான் மடிப்பாக்கத்துக்கு குடி வந்த பிறகும் மீண்டும் ஒருமுறை அதே நடந்தது... இப்போதெல்லாம் என்னதான் நடக்கிறது என்று உற்று கவனிக்க முயல்கிறேன்... ஆனால் முடியவில்லை... ஏதோ நடக்கிறது ஆனால் என்ன நடக்கிறது என்பது மட்டும் தெரியவில்லை... (இன்று இரவு தனி அறையில் படுக்கமுடியாது என்பது தெளிவானதால் ஹாலிலேயே அம்மாவுக்கு அருகில் படுக்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன்... உங்களுக்கு ஒன்றும் பயம் இல்லையே...) இது ஏதோ கற்பனை இல்லை... உண்மையில் நடந்த்து... இதேபோல் உங்களுக்கும் நடந்திருந்தால் சொல்லுங்கள் ஒரு சங்கம் அமைத்து போராடலாம். இதே வரிசையில் என்னை புரட்டிப்போட்ட மற்றொரு சம்பவம் என் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டில் நடந்தது... அந்த திகில் பற்றி அடுத்த கட்டுரையில்...

Tuesday 9 February 2010

நடந்தது என்ன...


மந்திரம், தந்திரம், மாய வித்தை, மோடி மஸ்தான் வேலைகளில் நம்பிக்கை இருக்கிறதா, இல்லையா என்பதையெல்லாம் விட்டு விட்டு, எனக்கு நடந்த சில விசயங்களைப் பற்றி நான் இங்கே சொல்லியாக வேண்டும்... பல வருடங்களுக்கு முன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றிருந்தேன்... கோவிலுக்குள் செல்லும் முன் அர்ச்சனை தட்டும், எல்லோரும் வாங்குகிறார்களே என்று உப்பு பாக்கெட்டும் வாங்கிக்கொண்டு, உள்ளே செல்ல வரிசையில் நின்று கொண்டேன்... வரிசை நகரும்போது இடையிலேயே ஒரு இடத்தில் எல்லோரும் உப்பைக் கொட்டிக்கொண்டிருந்தார்கள்... எனக்கு அது உப்பு கொட்டும் இடமாகத் தெரியவில்லை என்பதால் என் எதிரே நின்று கொண்டிருப்பவரை 'எங்கே உப்பைக் கொட்ட வேண்டும்...' என்று கேட்டேன்... அவர் உப்பு கொட்டும் இடத்தைக் காட்டி விட்டு தொடர்ந்தார்... 'இங்கே வர்றது இது தான் முதல் தடவையா...' என்றார். 'ஆம்' என்றேன். தோடர்ந்து பேச ஆரம்பித்தவர், கோவிலைப் பற்றியும் அம்மனைப் பற்றியும் சொல்லலானார்... 

இருவரும் சாமி தரிசனம் முடித்து விட்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வர நடந்தோம்... சரியாய் கோவிலுக்கு பின்னால் வர, 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் குறுக்கே வந்து மறைத்தார். காவியுடை கட்டியிருந்தார். கையில் வேப்பிலை கொத்து... முகம் முழுதும் தாடி... நெற்றியில் குங்குமம், விபூதி, சந்தனம் கலந்த பட்டை... இருவரும் நின்றோம். அவர் பேச ஆரம்பித்தார்... 'அப்பாவும், மகனுமா எதுக்கு இங்கே வந்திருக்கிங்கன்னு தெரியும்... அந்த காரியம் இன்னும் ஒரு மாசத்துல முடியும்னு அம்மா சொல்றா...' என்று சாமி ஆடியப்படியே அதிரடியாய் பேச, நாங்கள் மிரண்டுப் போனோம்... என் கூட வந்தவர் 50 வயது மதிக்கத்தக்கவர், அவரை என் அப்பா என்று சொன்னதோடு அதற்காக பணமும் கேட்டார்... என்னுடன் வந்தவருக்கு கோபம் வந்து விட்டது அவரை பிடித்து கத்த ஆரம்பித்தார்... நான் அவரை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துக் கொண்டு நகர்ந்தேன்... அதே இடத்துக்கு இரண்டாவது முறையாக வந்த போது, அந்த போலி சாமி வேறு யாரையோ பிடித்து வைத்து குறி சொல்லிக் கொண்டிருந்தான்... எங்களை ஓரக்கண்ணால் பார்த்தவன், நாங்கள் பார்ப்பது தெரிந்து அவசரமாய் திரும்பிக்கொண்டான்...

நாங்கள் மூன்று முறை சுற்றி விட்டு, பிறகு வெளிப் பிரகாரத்தில் அமர்ந்தோம்... மீண்டும் அந்த போலி அசாமியைப் பற்றி பேசி கோபப்பட்டார். பேச்சு கொஞ்சமாக எங்கள் குடும்பத்து பக்கமா திரும்பியது... அக்கறையாக விசாரித்த அவர், என் சங்கடங்களை சிலவற்றைக் கேட்டுவிட்டு, 'கவலைப்படாதிங்க... எல்லாம் அம்மா பார்த்துக்குவா...' என்றவர் சிறிது யோசித்து விட்டு என் கைகளை நீட்டச் சொன்னார். நானும் கைகளை வாங்குவது போல நீட்டினேன்... என் கைகலுக்கு மேல் அவர் கைகளை குவித்து பிடித்துக்கொண்டார்... அப்படியே கண்களை மூடி சிறிது நேரம் தியானித்தவரின் உடம்பு சற்று நேரத்துக்கெல்லாம் ஒரு குலுக்கு குலுக்கி தூக்கிப் போட்டது... அதிலிருந்து மீண்டு வந்தவராக கண்களை திறந்தார்... மூடியிருந்த கைகளை திறந்தார்... கை நிறைய ரோஜா இதழகள் கலந்த குங்குமம் இருந்தது... அது அப்போது தான் அம்மன் நெற்றியியிலிருந்து எடுத்து வந்தது மாதிரியே இருந்தது... எனக்கு தூக்கிவாரிப் போட்டது... உடம்பு முழுதும் இனம் புரியாத உணர்வு... நடந்தது என்னவென்று தெரியாமலேயே நடந்து முடிந்து விட்டது அந்த சம்பவம்... 'இது அம்மனோட நெத்தியில இருந்த குங்குமம்... இத‌ தினம் நெத்தியில பூசிட்டு வாங்க எல்லாம் சரியாயிடும்...' என்றபடி குங்குமத்தை கொட்டினார்... நான் அதை பத்திரமாக மடித்து வைத்துக் கொண்டேன்.

எப்படி என்று நான் பிரமித்துபோய் கேட்டதற்கு அவர் பதில் சொல்லவில்லை... நீங்கள் மந்திரவாதியா என்று கேட்டதற்கும் அவர் பதில் கூறவில்லை... என்னிடம் பணம் ஏதும் வாங்கிக் கொள்ளவும் இல்லை... அவர் சொன்ன ஒன்றே ஒன்று அவர் தீவிர அனுமார் பக்தராம்... அவரின் அனுகிரகத்தால் தான் இதெல்லாம் நடப்பதாக கூறினார்... பின் இருவரும் கிளம்பி திருச்சி வந்தோம்... உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு சென்று அங்கே அமர்ந்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம்... இரவு டின்னரை முடித்துக் கொண்டு  இருவரும் பிரிந்தோம்... அதற்குப் பிறகு நான் அவரை சந்திக்கவில்லை... சென்னையில் எவ்வளவோ தேடியும் அவர் சொன்ன முகவரியில் அவர் இல்லை... பல மாதங்கள் நான் அந்த குங்குமத்தை பூசி வந்தேன்... யார் இவர்... ஏன் என்னிடம் முதல் சந்திப்பிலேயே நட்புடன் பழகினார் (என்னுடைய‌ மூஞ்சி முதலில் பார்க்கிறவர்களை, 'இவனெல்லாம் ஒரு ஆளா... மூஞ்சியையும், மொகரையையும் பாரு...' என்று கோபப்படுத்தும் என்பதையும் மீறி!). என்ன நடந்தது என்று தெரியும், எப்படி நடந்தது என்று தெரியவில்லை... ஆனால் நடந்தது மட்டும் உண்மை... இது எப்படி என்று உங்களுக்கு தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள்!

இதே போல் இல்லை இதை விட பயங்கரமான இன்னொரு சம்பவம் ஒன்று எனக்கு நடந்தது... ஏன் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது... கிராமத்தில் மட்டுமல்ல, சென்னை வந்த பிறகும் அது தொடர்கிறது... அது பற்றி அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன்!

Sunday 7 February 2010

சாவுக்கு அழிவில்லை...!


சாவுக்கு
சாவு வருவதில்லை!
த‌ள்ளிப்போட‌ முடியுமோ என்ன‌மோ
அதை த‌டுக்க‌
ஆண்ட‌வ‌னாலும் முடிவ‌தில்லை!

க‌ட‌வுள் தோற்றுப்போன‌ இட‌ம்
சாவு!
ராம‌னும், ந‌பியும், ஏசுவும்
த‌ப்ப‌முடிய‌வில்லை இத‌ற்கு!

சில‌ருக்கு வாழ‌ ஆசை
சில‌ருக்கு சாவ‌ ஆசை
சில‌ருக்கு வாழ்ந்து சாவ‌ ஆசை
சில‌ருக்கு செத்து வாழ‌ ஆசை!

பணக்காரன் ஏழை
தாழ்ந்த ஜாதி உயர்ந்த ஜாதி
முடிந்தவன் முடியாதவன்
எல்லோருக்கும் ஒரே நீதி
சாவில்!

குறி பார்த்தோம்
ஆவியை கேட்டோம்
ஜாத‌க‌ம் க‌ணித்தோம்
எல்லோரும் சொன்னார்க‌ள்
இப்போது க‌ண்ட‌மில்லை என்று
அப்ப‌டியானால்
க‌ண்ட‌மில்லாம‌லில்லை!


தவித்துப் போகிறான் மனிதன்!
எமன் இருக்கிறானா
எங்கே இருக்கிறான்
எதை கூட்டுகிறான்
எதனுடன் கழிக்கிறான்
எதோடு பெருக்கி
எதோடு வகுக்கிறான்!
அவன் கணக்கு சரியா த‌வறா
அவ‌னுக்கு சாவுண்டா
அவ‌ன் இற‌ந்தாள் அழுவாருண்டா!
உல‌குக்கு தெரியாத
சூட்ச‌ம‌ம் இது!
ஏன் எங்கே எப்ப‌டி யார் எத‌ற்கு
என்ற‌ கேள்விக‌ள் இங்கே
ப‌ல‌யுக‌மாய் நிர்க‌தியாய்!

கூடியிருப்பவர்களின் அழுகை
இங்கே மீட்டெடுக்க‌ அல்ல‌
நினைவு கூற‌!
வ‌ந்த‌வ‌ர் சென்றே ஆக‌வேண்டும்
இது பொது விதி!
வ‌ந்த‌ விருந்தின‌ரை
வ‌ழிய‌னுப்ப்பி வைக்க‌
நாம் ப‌ழ‌க‌லாம்
வாழ்ந்த‌வ‌ரை நிம்ம‌தி என்று
வ‌ந்தவ‌ரும் செல்லலாம்!

சாவு நிர‌ந்த‌ர‌மான‌து
அத‌ற்கு அழிவில்லை
உல‌கை அழிக்கும் வ‌ரை!
முடிய‌வே முடியாது என்ப‌தை
ஏற்றுத்தான் ஆக‌வேண்டும்!