Thursday 17 December 2009

தெலுங்கானா - தீர்ப்பு திருத்தப்படுமா!



பிரிவு என்ப‌து எங்கேயும் க‌ஷ்ட‌ம் தான்... வீட்டில், நட்பில், உறவில், வாழ்க்கையில் என்றில்லை நாட்டிலும் கூட‌ அது பாதிப்பை ஏற்ப‌டுத்தும்... ஏற்படுத்துகிறது... ஏற்படுத்திவிட்டது... ஜீராவில் மூழுகிய‌ குலோப்ஜாமூனைப் போல‌ கிள‌ர்ச்சியில் மூழுகிக்கிட‌க்கிற‌து ஒரு மாநில‌ம். போராட்டம், கடையடைப்பு, மறியல், பஸ் எரிப்பு எனறு அவசரகதியில் சம்பவங்கள் தினமும் நடந்தபடியே இருக்கின்றன.

தெலுங்கானா விசயத்தில் இன்று ஒரு நிலைப்பாடு, நாளை ஒரு நிலைப்பாடு என்று அங்கே அரசியல்வாதிகள் அடிக்கும் அந்தர் பல்டிக்காக அவர்களுக்கு என்ன அவார்டு கொடுக்கலாம் என்று ஆழ்ந்த யோசனையில் இருக்கின்றன அனைத்துலக‌ யுனிவர்சிடிகளும். என்ன தின்னால் பித்தமும், சித்தமும் தெளியும் என்று தெரியாமல் திணறி திண்டாடி தெருவில் வந்து ஒப்பாரி வைக்கின்றன எல்லா கட்சிகளும். தெலுங்கானாவை பிரிப்பதா, சேர்ப்பதா என்பது பற்றியெல்லாம் இவர்களுக்கு பெரிய கவலையோ, வருத்தமோ கிடையாது... இதனால் இவர்கள் கட்சிக்கு எதிர்காலத்தில் ஏற்ப்படப்போகும் நன்மை தீமைகளைப் பற்றித்தான் இவர்களின் கவலை... அல்ஜீப்ராவிலும் வகுத்தும்,  கால்குலசிலும் பெருக்கியும், ட்ரிக்னாமன்ரியில் கழித்தும் இவர்கள் கணக்குப் போட்டு போட்டு, அடிக்கும் வெள்ளத்தில் அடித்துப்போய்விடாமல் தங்களை காப்பாற்றிக் கொள்ள‌ அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ராயல்சீமா மற்றும் கடலோர ஆந்திர எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தங்கள் பதவி விலகல் கடிதம் கொடுத்திருக்கிறார்கள்... அவர்களுக்குத் தெரியும் பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படாது என்று. காரியம் செய்ய காசிக்குப் போனாலும் காரியத்தில் கண்ணாயிருப்பவர்கள் ஆயிற்றே அரசியல்வாதிகள்... கொடுக்கத் தெரியாதவன் கொல்லிவாய் பிசாசிடம் கொடுத்து வைத்த கதையாக வாயால் வக்குறுதியை கொடுத்துவிட்டு ஆலையில் மாட்டிய ஆலைக்கரும்பாக சிக்கித் தவிக்கிறது மத்திய அரசு. மேலிடம் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வதாக ஆரம்பத்தில் கூறிய காங்கிரஸ்காரர்கள் இப்போது குய்யோ, முறையோவென்று குதிக்கிறார்கள்... நேற்று முதல்வர் ரோசையா இங்கே நல்லது நடக்க கடவுள் தான் நல்வழி காட்டவேண்டும் என்று புலம்பியிருக்கிறார்.. மத்தியில் ஆளும் தன் கட்சி இனி நல்வழி காட்டாது என்று முடிவுக்கு வங்துவிட்டார் போலிருக்கிறது.

சிரஞ்சீவி நன்கு நாட்களுக்கு முன் வரை தனி தெலுங்கானா என்று கோசமிட்டார். நெற்றிலிருந்து ஒன்றுபட்ட தெலுங்கானாவிற்க்காக போராடப் போவதாக கூறி தன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்... சினிமாவில் காட்சிகளை மாற்றுவதுபோல இங்கேயும்... இன்னும் எத்தனை காட்சிகளோ... சந்திரபாபு நாய்டு அதிகமாக வாய் திறப்பதில்லை.. அடுத்து என்ன செய்யலாம்... என்ன பேசலாம்... எந்த பக்கம் சாயலாம் என்று அறிவியல் கூடத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாக கேள்வி... சோனியாவும், மன்மோகன் சிங்கும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள் என்று அவர்கள் புராணம் பாடிக்கொண்டிருக்கிறார் தொடர் ஆட்ட நாயகன் சந்திரசேகர ராவ்...  மாநிலம் முழுதும் பற்றி எரிகிறது... பதட்டத்தில் இருக்கிறது..வாந்தி எடுத்தவனுக்குத் தான் வயித்துப்புண்ணுங்கற மாதிரி ஆட்டம் பாமின் பட்டனை அழுத்திவிட்டு விட்டு அமைதியாய் வாய் மூடி வேடிக்கைப்பார்க்கிறது மத்திய அரசு.



நேரு காலத்தைய மாநில மறு சீரமைப்பு ஆணையம், ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலன் கருதி, இரண்டையும் தனித் தனி மாநிலங்களாக அமைப்பதே நல்லது என, மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது. 1956 நவம்பர் 1ல், தெலுங்கானா பகுதி ஆந்திராவுடன் இணைத்தது. அப்போது போடப்பட்ட ஜென்டில்மேன் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வருடங்களுக்கு பின் தெலுங்கானாவின் வளர்ச்சி, ராயல்சேமா மற்றும் கடலோர ஆந்திர மாவட்டங்களை விட பின்தங்கி இருந்தால் மீண்டும் தனி மாநிலமாக பிரித்துக்கொள்ள முடிவெடுக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு ஆரம்பித்தது  பிரச்சனை.. அன்றிலிருந்து போராட ஆரம்பித்தவர்கள் தான்... இதுவரை 390க்கும் மேற்ப்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள்... அதில் நிறைய பேர் ஓஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள். தற்ப்போது நிலமையை ஆராய்ந்தால் கல்வி, வேலை வாய்ப்பு, குடிநீர் வசதி என்று அனைத்துத்துறைகளிலும் ஆந்திராவைவிட பின்தங்கியே இருக்கிறது தெலுங்கானா... கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறுகள் இம்மண்டலத்தில் மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்கின்றன என்றாலும் இன்னும் பல கிராமங்கள் குடிநீர் வசதி கூட இல்லாமல் இருப்பதாக கூறுகிறார்கள்.

இதற்கு தெலுங்கானாவை தனியாக பிரிக்காமலேயே,  தெலுங்கானா மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒப்பந்தங்கள் பற்றி யோசித்திருக்கலாம், தெலுங்கானாவிற்கு சிறப்பு சலுகைகளை வழங்கி இருக்கலாம், சதவீத அடிப்படையை மற்றியமைத்திருக்கலாம்... காரணம் இந்த பிரிவு நிச்சியம் ஒட்டுமொத்த ஆந்திராவின் வளர்ச்சியை பாதிக்கும்... அனைத்து வசதிகளும் கொண்டு முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிடுக்கும் ஐதராபாத்தை விட்டு விட்டு தனி தலைநகரம் அமைத்து மீதமுள்ள் 12 மாவட்டங்களும் இனி தலையெடுப்பது என்பது சாதாரன விசயமில்லை... அதற்கு 20 அல்லது 25 வருடங்கள் வரை ஆகலாம்... சதீஸ்கர் மற்றும் உத்ராஞ்சல் போலத்தான் வளர்ச்சி இருக்கும்... கூடவே இன்னொரு அபாயமும் இருக்கிறது, அது ராயல்சீமாவும் தனி மநிலம் கேட்டு கொண்டிருக்கிறது... அவர்கள் தங்கள் போராட்டங்களை பெரிதாக்கலாம்.

தனித்தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் பட்சத்தில், ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என, ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களையும் திருப்திபடுத்த நினைத்து ஐதராபாத்தை  யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் பட்சத்தில் தெலுங்கானாவும் அவ்வளவு சீக்கிரத்தில் வளர்ச்சி பெற்றுவிட முடியாது. அதற்கும் அதே வருடங்கள் ஆகும் வெளியுலகத்தை திரும்பிப்பார்க்க‌‌‌. மொத்தத்தில் இந்த பிரிவு வரும் பட்சத்தில் ஆந்திராவுக்கே நேரம் சரியில்லை என்று தான் தெரிகிறது. இப்போது நடக்கும் கிளர்ச்சியை காரணம் காட்டி மத்திய அரசு தங்கள் முடிவை வாபஸ் வங்கிக்கொள்ளும் சாத்தியமும் இருக்கிறது என்றாலும் நிறையவே யோசித்து முடிவெடுத்திருக்க வேண்டும் சோனியாஜி!

இது இப்படி இருக்க உண்ணாவிரதம் இருந்தால் தனி மாநிலம் கிடைத்துவிடும் என்று தங்கள் மாநிலங்களை பிரிக்கச்சொல்லி நிறைய பேர் நாடு முழுதும் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்திருக்கிறார்கள்... உணவுக்கு ஹோட்டலுக்குப் போகலாம், தென‌வுக்கு போகவேண்டிய இடம் வேற‌யாச்சே... அண்ணன் எப்போ போவான் தின்னை எப்ப காலியாகுங்கற மாதிரி தமிழ் நாட்டிலும் பிரிவினையைப்ப்ற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள், ராமதாஸும், மூவேந்தர் முன்னேற்றக்கழக சேதுராமனும்... பிரித்துவிட்டால் ஏதோ இவர்கள் தான் ஆட்சி அமைக்கப்போவது மாதிரி... இதற்கு எதிர் குரல் கொடுத்திருக்கிறார் முதல்வர்... நல்லவேளை நாம் தப்பித்தோம்... அது தான் சரி என்று சொல்லி தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து ஸ்டாலினுக்கு சென்னையையும், அழகிரிக்கு மதுரையையும் கொடுத்துவிட்டால், ஒட்டுமொத்த குடும்ப பிரச்சனையும், கட்சி பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்று களத்தில் இற‌ங்காமல் இருந்தாரே அது வரைக்கும் அவருக்கு கோடனுகோடி நன்றி!

No comments: