Sunday 13 December 2009

மதுரை தினகரன் தீர்ப்பு - சாகக்கிடக்கிறதா சட்டம்!



2007 மே மாதம் காலை 11 மணிக்கு மதுரையில் திகுதிகுவென கொளுந்து விட்டு எரிந்தது தினகரன் அலுவலகம், அட்டாக் பாண்டி & கோ வீசிய பெட்ரோல் குண்டால்... இதில் மூன்று பேர் அறைகளில் சிக்கி புகை மூட்டத்தால் மூச்சு விட முடியாமல் உயிரிழ‌ந்தார்கள்... அதில் இருவர் பொறியாளர்கள்.. ஒருவர் காவலாளி... இதற்காக தொடர்ந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ 17 பேர் மீது 8 சட்டப் பிரிவின் கீழ் 32 பக்க குற்றப் பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது... இதில் சட்டப்பிரிவு 302 & 307ம் அடக்கம்... கூடவே வெடிமருந்து சட்டப் பிரிவு 4 & 5 மற்றும் தமிழ் நாடு பொதுசொத்து சேதார சட்டப் பிரிவு 4ம் அடக்கம்... குற்றவாளிகளை தண்டிக்க இதை விட பெரிய சட்டங்கள் இந்தியாவில் இருந்தால் அது பொடாவும், தடாவும் தான்!

எரித்தது யார்? எரிக்கச்சொன்னது யார்? என்று மேலோகம், பூலோகம், சொர்க்கலோகம், இந்திரலோகம் என்று எல்லா லோகங்கலுக்கும், சிவன், விஷ்ணு, பிரம்மா முதல் சித்திரகுப்தன் வரை எல்லா ஜீவன்களுக்கும் தெளிவாய் தெரியும்... இவ்வளவு ஏன் எல்.கே.ஜி குழந்தையிடம் எதுவும் வாங்கி கொடுக்காமலேயே கேட்டாலே நச்சுன்னு நாக்கு தெரிக்கிற மாதிரி சொல்லிடும் இதுக்கெல்லாம் காரணம் அஞ்சா நெஞ்சன் மு.க.அழகிரி தான் என்று... கூடவே சம்பவத்தை நேரில் பதிவு செய்த‌ வீடியோ ஆதாரமிருக்கிறது. புகைப்பட ஆதாரமிருக்கிறது.

இந்த வழக்கிற்கு கடந்த புதன்கிழமை அன்று மதுரை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் ஒற்றை வரியில் ஒரு தீர்ப்பு வழங்கிருக்கிறது... அது 'விசாரனையின் போது பெரும்பான்மையான சாட்சிகள் விரோதமாக சொன்ன வாக்குமூலங்கலால் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரையும் நிரபராதிகள் என்று கூறி விடுதலை'  நீதிமன்றங்களின் நீதிப் பற்றி பேசினாலே நமக்கு பேதி வந்து மீதி இல்லாமல் போயிடும்... இந்த வழக்கில் 85 பேர் சாட்சியமளித்தனர்... சரி இதில் பெரும் பான்மையானவர்களின் சாட்சிகள் தான் சரியில்லை, சிறுபான்மையினரின் சாட்சிகளையாவது வைத்து தண்டித்திருக்கலாமே?



விடுதலையானவர்கள் இதற்கு கைமாறாக மத்தியானமா மதுரை மீனாச்சிய‌ம்மன் கோவிலுக்கு போய் அர்ச்சனை பண்ணியிருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தப்பு... பதிலாக நேரே அண்ணன் அழகிரியை பார்த்து அவருக்கு லட்சார்ச்சனை பண்ணிவிட்டு தொடர்ந்து தங்கள் கடமைகளை செய்ய வேறு தடைகள் ஏதும் வர‌க்கூடாது என்று வேண்டிக்கொண்டு சென்றிருப்பார்கள். இந்த வெற்றியை அழகிரி அண்ணனின் காலடியில் சமர்ப்பிப்பேன் என்று கூறியிருக்கிறார் அட்டாக் பாண்டி... எங்க‌ சொல்றது இந்த கொடுமையை... கல்கத்தா காளி தான் இவங்களுக்கெல்லாம் கூலி குடுக்கணும்.

குற்ற‌வாளிக‌ள் மீது க‌டும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்கும் வ‌ரை போராடுவோம் என்றார் ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌போது க‌லாநிதிமாற‌ன்.. ந‌ல்ல‌வேளை நீதி கிடைக்கும் வ‌ரை போராடுவோம் என்று சொல்லித் தொலைக்க‌வில்லை... குடிக்கிறதுன்னு முடிவான பிறகு குந்திகிட்டு குடிச்சா என்ன நின்னுகிட்டு குடிச்சா என்னங்கற கணக்கா சில‌ நாட்க‌ளுக்கு முன் தயாநிதிமாறன் த‌ன் பிற‌ந்த‌ நாளுக்கு அழ‌கிரிகிட்ட‌ ஆசிவாங்குன‌ நிக‌ழ்ச்சி ச‌ன் தொலைக்காட்சியிலும், ப‌த்திரிக்கையில் வ‌ந்த‌து... இதை பார்த்து பார்த்து புல‌ங்காகித‌ம் அடைந்து இவர்களை மனதார பாராட்டியிருக்கும் இற‌ந்த‌வ‌ர்க‌ளின் குடும்பங்கள்.

சம்பவத்தின் போது முதல்வர் 'இத்தகைய தாக்குதலை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது, திமுக ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரு கட்சி(!), தனக்கு யார் வாரிசு என்ற பேச்சுக்கே இடமில்லை, வன்முறையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்... ஐயா, என் மண்டையில் முண்டா புரட்டிக் கொண்டு தண்டால் எடுக்கிற ஒரு கேள்வி, 'சட்டப்படி நடவடிக்கை... சட்டப்படி நடவடிக்கைன்னா அது இதுதானுங்களா...!'



சம்பவத்தை சன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது... உலகமே இதை பார்த்தது... இருந்தும் சாட்சிகள் சரியில்லை என்று கூறி குற்றவாளிகளை நீதிமன்றம்  இப்படி விடுதலை செய்தால், இனி நீதி பற்றி எப்படி நமக்கு நம்பிக்கை வரும்... காவல் நிலையமும், நீதி மன்றமும் எதற்காக இயங்குகிறது நீதிக்காகவா, நிதிக்காகவா என்கிற கேள்வி எல்லோருக்கும் மூளையில் முக்காடு போட்டுக்கொண்டு முடங்கிக் கிடக்கிறது.

2000ம் ஆண்டு தர்மபுரியில் பஸ்ஸோடு மாணவிகளை எரித்த சம்பவத்திற்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் இப்படித்தான் சாட்சிகள் சரியில்லை என்று குற்றவாளிகளை விடுதலை செய்தது... இதை கண்டித்த உயர்நீதி மன்றம் அந்த வழக்கை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றியது... சேலம் நீதிமன்றம் குற்றவாளிகளில் 3 பேருக்கு மரண தண்டனையும் 25 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது... இதை எதிர்த்து சம்மந்தப் பட்டவர்கள் மேல் முறையீடு செய்தபோது உயர்நீதி மன்றமும் அதே தண்டனையை உறுதி செய்தது... அதையும் எதிர்த்து மேல் முறையீடு செய்து இப்பொது அந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் இருக்கிறது. உச்சநீதி மன்றம் மரண தண்டனையை  நிறுத்தி வைத்திருக்கிறது. வழக்கு நிலுவையில் உள்ளது.

இதேபோல் இந்த வழக்கிலும் உயர்நீதி மன்றம் தலையிட்டு வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றச் சொல்லுமா... இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ மேல் முறையீடு செய்யுமா என்பதெல்லாம் நமக்கு தெரியாது என்றாலும் கஞ்சா குடிச்சவன் காஞ்சி மடத்துக்கு போனா மட்டும் கஞ்சியா குடிக்கப் போறான்ங்கற மாதிரி தெள்ள தெளிவா தெரிந்த ஒன்று சம்மந்தப் பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்காது என்பது தான். பாவக்காய் கசக்குதுன்னு வேப்பங்காய தின்ன கதையாகத் தானிருக்கும்... பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

3 comments:

Anonymous said...

enna solvathu?

Unknown said...

இதற்கு தீர்ப்பு சொல்ல சரியான தருணம் அடுத்த தேர்தல்!

Anonymous said...

sattam oru irutarai enbathu ingu uruthipadutha patuvitathu....

Ippadi arajagam panravangala onnum panna mudiyalaye ninaikurapa romba varuthama iruku