பழையன எரித்த
மார்கழியின் கடைசி இரவு
போனது போகியாக!
தமிழனின் முதல் நாளில்
கதிரவன் கண் விழிக்கும் முன்னே
கண் விழித்தாயிற்று!
விடியாத பின் இரவின்
முதிர்ந்து போன நாழிகைகளில்
உருவங்கள் நகர்வது
தெரிந்தது தெருவில்
எல்லோர் வீட்டு வாசலும்
சுகப்பட்டு கிடந்தன
கன்னிகளை சுமந்து!
கோலம் போடும் கன்னிகளுக்கு
உதவி செய்தார்கள்
அழகை அடகுப் பிடித்து செல்ல
வந்திருந்த ஆடவர்கள்!
வாக்கப்பட்டவன் சொன்னது
என்னவோ தெரியவில்லை!
வெட்கப்பட்ட சிரிப்பு
சிந்தி சிதறியது கோலத்தின்
குறுக்கு புள்ளிகளுக்கு இடையே
கிழக்கு வானம் முழுதும்
அடந்திருந்த் இருட்டை
பொன்னிற ஒளியால் சுத்தம்
செய்து கொன்டிருந்தான் கதிரவன்!
பசுமாடு பெய்ததை சுட சுட
போட்டிப்போட்டுக்கொண்டு
பிடித்து சென்றார்கள் கோமயமாக!
கரும்பு கேட்டு அழுதது
நேற்று அதே நினைவில் தூங்கியிருந்த
எதிர் வீட்டு குழந்தை!
பூசணிப்பூவை தந்துவிட்டு
அருகம்பில்லை வாங்கி கொண்டு
கடனை சமன் செய்து சென்றாள்
மூன்றாவது வீட்டின் மூன்றாவது
படிக்கும் சிறுமி!
செங்கற்களை அறைத்து
மாவாக்கி கொண்டிருந்தாள்
திருவையில் தங்கை!
மாடுகளின் கொம்புகளை
சீவிக்கொண்டிருந்தான் முனியன்!
9 மணிக்கு கோடுவெட்டி
11 மணிக்கு பொங்கள் வைத்து
12 மணிக்கு படையலிட சொல்லி சென்றான்
தண்டோரா போட்டவன்!
கூண்டிலிருந்து விடுதலையான
சந்தோசத்தில் சிதறி
மறைந்தன கோழிகள்!
உறக்கத்திலிருந்த தாயை
முட்டி மோதி உரசி
விளையாடிக்கொண்டிருந்தன
ஆறு மாத ஆட்டுக் குட்டிகள்!
'சர்' 'சர்' என்று சத்தம்
எல்லா மாட்டுக்கொட்டைகளிலும்
பால் தானம் நடந்து கொண்டிருந்தது!
ஆவாரம்பூவும், பூலாம்செடியும்
விற்று வந்தான் ஒரு வியாபாரி
ஹெர்குலஸ் சைக்கிளில்!
புது மண் பானைகளையும், சட்டிகளையும்
கழுவி சுத்தம் செய்து
மஞ்சள், இஞ்சி கொத்துகள் கட்டினாள்
இரவு முழுதும் தூங்காத பாட்டி!
தெருமுழுதும் நறுமனத்தை
இறைத்துச் சென்றாள் பூக்காரி
சோம்பல் முறித்து
சுறுசுறுப்பாய் எழுந்தது நாய்!
நான் காத்திருந்தேன்
நகரத்தின் மடியில்
நரகமாய் வாழ்வதை மறந்து!
மனித நெரிசலில்
சிக்கி தவித்து
மனதை மானத்தையும் இழந்ததை மறந்து!
பண ஆசையில்
பலவும் பறிபோனதை மறந்து!
உயிரோட்டமாய் வரப்போகும்
சூரிய உதயத்தை பார்த்துவிட
ஊர்முழுதும் பரவப்போகும்
தை வாசத்தை சுவாசித்து விட!
5 comments:
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்
கிராமத்துப் பொங்கலை கண் முன் நிறுத்திவிட்டீர்கள். அருமை. பொங்கல் வாழ்த்துகள்.
சபா அவர்களே
தை வாசத்தை நன்றாக சுவாசிக்க முடிகிறது இங்க
இப்படிக்கு
-பாலா-
இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்
பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா....வாழ்க வளமுடன்
Post a Comment