Tuesday 9 February 2010

நடந்தது என்ன...


மந்திரம், தந்திரம், மாய வித்தை, மோடி மஸ்தான் வேலைகளில் நம்பிக்கை இருக்கிறதா, இல்லையா என்பதையெல்லாம் விட்டு விட்டு, எனக்கு நடந்த சில விசயங்களைப் பற்றி நான் இங்கே சொல்லியாக வேண்டும்... பல வருடங்களுக்கு முன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றிருந்தேன்... கோவிலுக்குள் செல்லும் முன் அர்ச்சனை தட்டும், எல்லோரும் வாங்குகிறார்களே என்று உப்பு பாக்கெட்டும் வாங்கிக்கொண்டு, உள்ளே செல்ல வரிசையில் நின்று கொண்டேன்... வரிசை நகரும்போது இடையிலேயே ஒரு இடத்தில் எல்லோரும் உப்பைக் கொட்டிக்கொண்டிருந்தார்கள்... எனக்கு அது உப்பு கொட்டும் இடமாகத் தெரியவில்லை என்பதால் என் எதிரே நின்று கொண்டிருப்பவரை 'எங்கே உப்பைக் கொட்ட வேண்டும்...' என்று கேட்டேன்... அவர் உப்பு கொட்டும் இடத்தைக் காட்டி விட்டு தொடர்ந்தார்... 'இங்கே வர்றது இது தான் முதல் தடவையா...' என்றார். 'ஆம்' என்றேன். தோடர்ந்து பேச ஆரம்பித்தவர், கோவிலைப் பற்றியும் அம்மனைப் பற்றியும் சொல்லலானார்... 

இருவரும் சாமி தரிசனம் முடித்து விட்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வர நடந்தோம்... சரியாய் கோவிலுக்கு பின்னால் வர, 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் குறுக்கே வந்து மறைத்தார். காவியுடை கட்டியிருந்தார். கையில் வேப்பிலை கொத்து... முகம் முழுதும் தாடி... நெற்றியில் குங்குமம், விபூதி, சந்தனம் கலந்த பட்டை... இருவரும் நின்றோம். அவர் பேச ஆரம்பித்தார்... 'அப்பாவும், மகனுமா எதுக்கு இங்கே வந்திருக்கிங்கன்னு தெரியும்... அந்த காரியம் இன்னும் ஒரு மாசத்துல முடியும்னு அம்மா சொல்றா...' என்று சாமி ஆடியப்படியே அதிரடியாய் பேச, நாங்கள் மிரண்டுப் போனோம்... என் கூட வந்தவர் 50 வயது மதிக்கத்தக்கவர், அவரை என் அப்பா என்று சொன்னதோடு அதற்காக பணமும் கேட்டார்... என்னுடன் வந்தவருக்கு கோபம் வந்து விட்டது அவரை பிடித்து கத்த ஆரம்பித்தார்... நான் அவரை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துக் கொண்டு நகர்ந்தேன்... அதே இடத்துக்கு இரண்டாவது முறையாக வந்த போது, அந்த போலி சாமி வேறு யாரையோ பிடித்து வைத்து குறி சொல்லிக் கொண்டிருந்தான்... எங்களை ஓரக்கண்ணால் பார்த்தவன், நாங்கள் பார்ப்பது தெரிந்து அவசரமாய் திரும்பிக்கொண்டான்...

நாங்கள் மூன்று முறை சுற்றி விட்டு, பிறகு வெளிப் பிரகாரத்தில் அமர்ந்தோம்... மீண்டும் அந்த போலி அசாமியைப் பற்றி பேசி கோபப்பட்டார். பேச்சு கொஞ்சமாக எங்கள் குடும்பத்து பக்கமா திரும்பியது... அக்கறையாக விசாரித்த அவர், என் சங்கடங்களை சிலவற்றைக் கேட்டுவிட்டு, 'கவலைப்படாதிங்க... எல்லாம் அம்மா பார்த்துக்குவா...' என்றவர் சிறிது யோசித்து விட்டு என் கைகளை நீட்டச் சொன்னார். நானும் கைகளை வாங்குவது போல நீட்டினேன்... என் கைகலுக்கு மேல் அவர் கைகளை குவித்து பிடித்துக்கொண்டார்... அப்படியே கண்களை மூடி சிறிது நேரம் தியானித்தவரின் உடம்பு சற்று நேரத்துக்கெல்லாம் ஒரு குலுக்கு குலுக்கி தூக்கிப் போட்டது... அதிலிருந்து மீண்டு வந்தவராக கண்களை திறந்தார்... மூடியிருந்த கைகளை திறந்தார்... கை நிறைய ரோஜா இதழகள் கலந்த குங்குமம் இருந்தது... அது அப்போது தான் அம்மன் நெற்றியியிலிருந்து எடுத்து வந்தது மாதிரியே இருந்தது... எனக்கு தூக்கிவாரிப் போட்டது... உடம்பு முழுதும் இனம் புரியாத உணர்வு... நடந்தது என்னவென்று தெரியாமலேயே நடந்து முடிந்து விட்டது அந்த சம்பவம்... 'இது அம்மனோட நெத்தியில இருந்த குங்குமம்... இத‌ தினம் நெத்தியில பூசிட்டு வாங்க எல்லாம் சரியாயிடும்...' என்றபடி குங்குமத்தை கொட்டினார்... நான் அதை பத்திரமாக மடித்து வைத்துக் கொண்டேன்.

எப்படி என்று நான் பிரமித்துபோய் கேட்டதற்கு அவர் பதில் சொல்லவில்லை... நீங்கள் மந்திரவாதியா என்று கேட்டதற்கும் அவர் பதில் கூறவில்லை... என்னிடம் பணம் ஏதும் வாங்கிக் கொள்ளவும் இல்லை... அவர் சொன்ன ஒன்றே ஒன்று அவர் தீவிர அனுமார் பக்தராம்... அவரின் அனுகிரகத்தால் தான் இதெல்லாம் நடப்பதாக கூறினார்... பின் இருவரும் கிளம்பி திருச்சி வந்தோம்... உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு சென்று அங்கே அமர்ந்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம்... இரவு டின்னரை முடித்துக் கொண்டு  இருவரும் பிரிந்தோம்... அதற்குப் பிறகு நான் அவரை சந்திக்கவில்லை... சென்னையில் எவ்வளவோ தேடியும் அவர் சொன்ன முகவரியில் அவர் இல்லை... பல மாதங்கள் நான் அந்த குங்குமத்தை பூசி வந்தேன்... யார் இவர்... ஏன் என்னிடம் முதல் சந்திப்பிலேயே நட்புடன் பழகினார் (என்னுடைய‌ மூஞ்சி முதலில் பார்க்கிறவர்களை, 'இவனெல்லாம் ஒரு ஆளா... மூஞ்சியையும், மொகரையையும் பாரு...' என்று கோபப்படுத்தும் என்பதையும் மீறி!). என்ன நடந்தது என்று தெரியும், எப்படி நடந்தது என்று தெரியவில்லை... ஆனால் நடந்தது மட்டும் உண்மை... இது எப்படி என்று உங்களுக்கு தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள்!

இதே போல் இல்லை இதை விட பயங்கரமான இன்னொரு சம்பவம் ஒன்று எனக்கு நடந்தது... ஏன் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது... கிராமத்தில் மட்டுமல்ல, சென்னை வந்த பிறகும் அது தொடர்கிறது... அது பற்றி அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன்!

3 comments:

ஜிஎஸ்ஆர் said...

நண்பா இண்டரஸ்ட்டிங்கா இருக்கு அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க அப்புறம் அதென்ன நன்பா முதல் பாரவும் இரண்டாவது பாரவும் ஒன்னா இருக்கு கவனக்குறைவுனு நினைக்கிறேன் அத மாத்துங்க நண்பா


வாழ்க வளமுடன்


என்றும் அன்புடன்
ஞானசேகர்

ரெத்தினசபாபதி said...

நன்றி ஞானசேகர், தவறுதலாக இரண்டாவது பாராவிற்க்கு பதிலாய் முதல் பாராவையே மறுபடியும் போட்டு விட்டேன்... மன்னிக்கவும்... இப்பொது அதை சரி செய்து விட்டேன்... அடுத்த பாகத்தை இன்று போடுகிறேன்...

virutcham said...

அதிசயமா இருக்கே.
அவர் பணம் வாங்கவில்லை என்றிர்கள். நல்வர்.

சமயபுரம் என்றதும் அந்த வழியெங்கும் கொட்டிக் கிடந்து, காலில் குத்தும் உப்பு நினைவுக்கு வருகிறது. கண்ட இடத்தில கொட்டி பக்தர்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார்கள்.