Monday, 26 October 2009

எனன வேண்டுவது உன்னிடம்...!

நான் உன்னிடம் என்ன வேண்டுவது என்று
எனக்கு கொஞ்சம் எடுத்துச்சொல் கடவுளே!

மதமில்லாத உலகு தாவென்றா
எப்படி முடியும் நீ தான்
ஏகப்பட்ட மதம் தரித்து எல்லைப் பிரச்சனையில்
சிக்கித் த‌விக்கிறாயே!
ஜாதியில்லாத‌ நாடு தாவென்றா
எப்படி முடியும் நீ தான்
ஐயரை மட்டும் அருகில் வைத்து கொண்டு
அடுத்தவரையெல்லாம் வெளியில் வைத்திருக்கிறாயே!
போதையில்லாத‌ புவி தாவென்றா
எப்படி முடியும் நீ தான்
சாராய‌மும் பிராந்தியும் வைத்து
ப‌டைக்க‌ச் சொல்லி ப‌ட‌ப‌ட‌க்கிறாயே!
புகையில்லாத பிரபஞ்சம் தாவென்றா
எப்படி முடியும் நீ தான்
உடுக்கடித்து குறிச்சொல்லி
சுருட்டுக்கட்டு கேட்டுத்தொலைக்கிறாயே!

லஞ்சமில்லாத சமுதாயம் தாவென்றா
எப்படி முடியும் நீ தான்
அதிக‌ப் ப‌ண‌ம் தருபவர்க‌ளை அழைத்து பக்கத்தில் வைத்து
பூஜை செய்ய‌ச்சொல்லி புல‌ங்காகித‌ம் அடைகிறாயே!
கொலையில்லா த‌ர‌ணி தாவென்றா
எப்படி முடியும் நீ தான்
ஆடு கோழி அறுக்க‌ச்சொல்லி ந‌ர‌ப‌லியும் கொடுக்க‌ச்சொல்லி
உச்ச‌ரித்து ந‌ச்ச‌ரிக்கிறாயே!
ஆடம்பரமில்லா பூமி தாவென்றா
எப்படி முடியும் நீ தான்
வைரத்தாலும் வைடூரியத்தாலும் அலங்கரிக்கச் சொல்லி
ஆட்டம் போட்டு அடம்பிடிக்கிறாயே!
ஆசையேயில்லாத‌ நானில‌ம் தாவென்றா
எப்படி முடியும் நீ தான்
கோபுரம் தங்கத்திலும் கோட்டை தந்தத்திலும் வேண்டுமென்று
சாமியாடி கேட்டு சாதித்துக்கொள்கிறாயே!
பல தாரமில்லாத வையகம் தாவென்றா
எப்படி முடியும் நீ தான்
கக்கத்துக்கு ஒன்றாய் மனைவியை அணைத்து
புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கிறாயே!
காம கவர்ச்சியில்லா பூவுலகு தாவென்றா
எப்படி முடியும் நீ தான்
காமசூத்திரத்துக்கு மாடலாய் நிற்ப‌துபோல்
ஆங்காங்கே ஆடைகளை துறந்து காட்சி தருகிறாயே!
வன்முறையில்லாத பூலோக‌ம் தாவென்றா
எப்படி முடியும் நீ தான்
கைக்கொன்றாய் ஆயுதம் எந்தி
கண்களிலே கோபவெறி காட்டி நிற்கின்றாயே!
அடிமைத்தனமில்லாத‌ நிலப்பரப்பு தாவென்றா
எப்படி முடியும் நீ தான்
வில‌ங்குகளை அடிமையாக்கி
வாக‌ன‌மாய் அட‌க்கி வைத்திருக்கிறாயே!
சத்தியமாய் எனக்குத் தெரியவில்லை
நீயே சொல் கடவுளே நான்
எனன வேண்டுவது உன்னிடம் என்று!

3 comments:

Anonymous said...

நீங்கள் பட்டியலிட்டிருக்கும் அபத்தங்கள்
மனிதர்களாகிய நாம் செய்தது அல்லவா?
அதை பொருத்து கொண்டிருப்பது ஏன்
என்று கேளுங்கள்?

Anonymous said...

வலை தளம் அழகாக
இருக்கிறது.ரசனையுடன் மாற்றி
இருக்கீறீர்கள்.

ரெத்தினசபாபதி said...

நன்றி...