Monday, 28 December 2009

நீயும் ஒரு நாள்...சுனாமி பினாமி போல வந்து சென்ற நாளை ஐந்தாவது வருடமாக கடந்த 26ந் தேதி வேதனையுடன் நினைவு கூர்ந்தது உலகம்... நாகையில் ஒரு பெண்மணி தரையில் உருண்டு, புரண்டு அழுது புல‌ம்பியது சுனாமி காட்சிகளை மீண்டும் நம் கண் முன்னே கொண்டுவந்தது... இன்னும் அதே வேகத்துடனும், உணர்ச்சியுடனும் அவரிடம் இருக்கும் அந்த சோகம் இழந்த உயிரின் அல்லது உயிர்களின் மீது அவர் கொண்டிருந்த அன்பையும், பாசத்தையும் கட்டவிழ்த்து காட்டுகிறது... அவர் இழந்தது கணவனாக இருக்கலாம், மகனாக இருக்கலாம், மகளாக இருக்கலாம்... அப்பாவாக இருக்காலாம், அம்மாவாக இருக்கலாம்... அது யாரென்று நமக்கு தெரியாதபோதும் அந்த சோகம் நாம்மைத் தாக்கித்தான் போனது... அந்த வேதனை நம்மை பாக்கியில்லாமல் பாதித்தது... நம் ஆறுதல் இது போன்று பாதிக்கப்பட்டவர்களின் சோகத்தை கொஞ்சமேனும் அசைத்துப் பார்க்குமேனால் அதுவே நமக்கு ஆறுதல்... சுனாமியின் போது நான் எழுதிய ஒரு கவிதை இங்கே வெளியிட்டு அதை சுனாமியில் இறந்தவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்...

வீதியெங்கும் சடலங்கள்
கரையெங்கும் பிணங்கள்
கிளைகள் தோறும் சவங்கள்!

கட்டிடங்கள் பலவும் காணவில்லை
படகுகள் எல்லாம் மொட்டைமாடியில்
வாகனங்கள் அனைத்தும் உருமாறி!

கடலில் போனவர்களை
கணக்கெடுக்க ஆளில்லை
மடிந்தவர்களின் ஜாதகத்தில்
சனி எங்கேயிருந்தான்
என்று தெரியவில்லை
கரையிலிருந்த கடவுளெல்லாம்
எங்கே போயின புரியவில்லை!

உன் கோர, கொடூர தாண்டவம்
எதன் பொருட்டு
அப்பாவிகளை அழிப்பதில் உனக்கு
அப்படி என்ன வெட்கமில்லா ஆணவம்!

தட்டிக்கேட்க ஆளில்லை
என்ற கர்வமா
தண்டிக்க மனிதரில்லை
என்ற செருக்கா
அடக்க யாருமில்லை
என்ற திமிரா!

இங்கே அழுபவர்களின்
கண்களிலும் நீர் தான்
அதில் உப்பிருக்கிறது
உன்னிடமும் நீர்தான்
அதிலும் உப்பிருக்கிறது
எப்படி நன்றி கெட்டுப் போனாய்!

உன்னை தினம் பூஜித்து
நொடிக்கொருமுறை யாசித்து
உன்னால் உண்டு உடுத்தி
உறங்கி உயிர் வாழும்
மீனவ ஜாதியை ஏன் இப்படி
கோரமாய் இம்சிக்கிறாய்
கூடயிருந்து குல நாசம்
உன் நிஜ முகமா!

அதிகாரம் இருக்கிறது என்பதற்க்காக‌
இப்படி அரசியல்வாதி போல்
துஷ்பிரயோகமும், துஷ்டப்பிரயோகமும்
செய்து விட்டாயே
இந்த‌ வேத‌ணையும், கோர‌மும் தான்
உன் ஆண‌வ‌த்திற்கு தீனியா
உன் அக‌ங்கார‌த்துக்கு உண‌வா!

துறவரம் கலைத்து
கலவரம் செய்த கடலே
என்றோ அழிக்கப்போகிறாய்
என்று தெரிந்துதான் அன்றே
உனக்கு 'பூதம்' என்று
பெயர் வைத்தார்களோ!

'தான்' என்ற அகந்தை
அழிந்துபோகுமாம்
அப்படி என்றால்
நீயும் ஒரு நாள்...!

No comments: