Tuesday, 22 December 2009

வாங்க... பஜ்ஜி சாப்பிடலாம்!அலுத்த நேரத்தில் ரோட்டோர டீக்கடைகளில் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டே டீ குடிப்பவரா நீங்கள்... அப்படின்னா வங்க, இது உங்களுக்குத்தான்.

வழக்கம் போல அன்றும் சாயங்கால நேரத்தில் அலுவலக நண்பர்களுடன் பக்கத்து கடைக்கு டீ சாப்பிட சென்றோம்... 'என்ன ஆனாலும் இன்று பஜ்ஜி மட்டும் சாப்பிட்டு விடக்கூடாது...' என்று சக்தி வினாயகர் தலையில் சத்தியம் செய்துவிட்டுத்தான் எப்போதும் கடைக்குள் செல்வது வ்ழக்கம்... என்றாலும் கடைக்குச் சென்றவுடன், வாசலில் நின்றுக்கொண்டு வருத்தமே இல்லாமல் வாங்கித் தின்று கொண்டிருப்பவர்க‌ள் நம் கண்ணில் பட்டு கொஞ்சம் கலங்க வைப்பார்கள்... அதையும் மீறி கட்டுக்கோப்போடு உள்ளே சென்று அவசர அவசரமாக டீ போட சொல்லி விட்டு கத்திருந்த வேலையில் தான் அந்த அசம்பாவிதம் நடந்தது... கடைக்காரர் எங்களைப் பார்த்து 'பஜ்ஜி சாப்பிடுங்க சார்... நல்லா சூடா இருக்கு...' என்றார். வேண்டா வெறுப்புக்கு 'ஏண்டா கேட்டாய்...' என்பது போல் அவரை திரும்பி பார்த்தாலும், 'எப்படா கேட்பான்...' என்று எதிர்பார்த்து கத்திருந்த அடிமனது எகிறி குதித்தது.

அடிமனது எண்ணங்களை அசிங்கப் படுத்திவிடக்க் கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் ஒருமுறை பஜ்ஜிப்பக்கம் திரும்பினால், அது பர்தா போடாத பருவ மங்கைப் போல பளபளவென நம்மைப்பார்த்து கண் சிமிட்டியது... சரி தான் என்று கட்டுப்பாட்டை உடைத்தெரிந்துவிட்டு இன்னைக்கு ஒருநாள் சாப்பிட்டு தொலைப்போம் என்று ஒரு பஜ்ஜியை கையில் எடுத்தேன்... கூட வந்த நண்பர்களில் கனிகண்ணனைத் தவிர ஜேபியும், சந்த்ருவும் என்கூட சேர்ந்து கொண்டார்கள். நான் அதற்காகவே வைக்கப்பட்டிருந்த துண்டு பேப்பர்களில் ஒன்றை எடுத்து பஜ்ஜியை அதனுள் சுருட்டி அமுக்க ஆரம்பித்தேன்... செக்கில் எண்ணை பிழிவது மதிரி காகிதத்தை கடந்து வெளியே வந்தது எண்ணை... வரலாற்று சிறப்புமிக்க அந்த பஜ்ஜியில் எண்ணைப்பிழியும் செயலை செய்து முடித்து, பஜ்ஜியை ஒரு வாய் கடித்தேன்... அதுவரை நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த கனிகண்ணன் அதற்காகவே காத்திருந்தவன் போல மெதுவாக வாய் திறந்தான்.'ஏன் சபா... இந்த பேப்பர எடுத்து இந்த அமுக்கு அமுக்குறீங்கள... இதுக்கு முன்ன இந்த பேப்பர் எங்க இருந்ததோ... எப்படி இருந்ததோ... என்னவா இருந்ததோ...'  என்று ஆரம்பித்தான்.

'என்ன சொல்ல வர்ற இப்போ...' என்றேன் சாப்பிடுவதை நிறுத்தாமல்.

'இல்ல... உங்க வீட்லயும் பேப்பர் வாங்கறீங்களே... நீங்க அத எப்படியெல்லாம் யூஸ் பண்றீங்க... கடைசியா அத‌ மடிச்சி பக்குவமா கடையில போடறீங்களே, அது தான் இங்க வந்து சேருது... காலையில கூட எங்க ரூமுக்கு வர்ற பேப்பர எடுத்து நான் என்ன துடைச்சேன்னா...' என்று மேலும் விடாமல் லந்து கொடுத்தவனை, ராங் நம்பர் வந்த மொபைல் போனை கட் செய்வது மாதிரி சட்டென கட் செய்தேன்... ஒருத்தன் பஜ்ஜி சாப்புடறது குத்தமாடா... அதுக்கு இந்த‌ அள்வுக்கு ஆராய்ச்சி தேவையா... இவ‌னையெல்லாம் ஆள‌ வைச்சு ஆப்கானிஸ்தானுக்கு க‌ட‌த்த‌னும்னு மனசுல நினைச்சுக்கிட்டேன்... கண்டவன் சொல்ற கண்டதையும் கேட்டுக்கிட்டு அதுக்காகவெல்லாம் நாம நம்மை மாத்திக்கமுடியாது என்று ஜேபியும், சந்துருவும் எடுத்த பஜ்ஜியை சாப்பிட்டுவிட்டாலும் என்னைப்போலவே செம கடுப்பில் தான் இருந்தார்கள்... மவனே... நீ மாட்டு, உன் மண்டையுலேயே மாண்டலின் வாசிக்கலன்னா பார்த்துக்கோ என்று கர்வத்தை வளர்த்துக்கொண்டோம். (ஜேபியும் இதேபோல ஒரு லந்து பார்டி தான், இவர் லீலைகளை பிறகு ஒரு கட்டுரையில் எழுதுகிறேன்).

'போதும்... இத்தோட நிறுத்திக்க... நான் இந்த பஜ்ஜிய சாப்பிடுறது தான உனக்கு பிரச்சனை... வேண்டாம் போ...' என்றபடி மீதமிருந்த பஜ்ஜியை அருகில் படுத்துகிடந்த நாயின் முகத்தருகே தூக்கிப் போட்டேன்... நல்ல உறக்கத்திலிருந்த அந்த நாய் தன் அருகில் ஏதொ ரசாயனா அணுகுண்டு தான் விழுந்துவிட்டதோ என்று நினைத்து திடுக்கிட்டு முழித்தது... அருகில் ப்ஜ்ஜியை பார்த்ததும் தான் பயங்கர கடுப்பாகி விட்டது போல, அப்படியே திரும்பி என்னைப் பார்த்தது ஒரு முறை முறைத்தது... ஏனோ என் தொப்புலைச் சுற்றி ஊசிப் போடுவது போல் ஒரு நினைவு மனதில் தேவையில்லாமல் தோன்றி மறைந்தது.

'டிஸ்டர்ப் பண்ணதுக்கு சாரி... ஏதோ தெரியாம‌ தப்பு நடந்துப்போச்சு... கோவிச்சுக்காதிங்க... நீங்க தூங்குங்க...' என்பது போல் நான் பார்த்த பிறகுத்தான் சமாதானமாகி மறுபடியும் தூக்கத்தைத் தொடர ஆரம்பித்தது... காசியிலிருக்கும் கைலாசனாதர் மேல் சத்தியமா சொல்றேன் அந்த நாய் பஜ்ஜிய தொடவேயில்லை... அதுக்கு எதாவ‌து கொல‌ஸ்ட்ரால் பிர‌ச்ச‌னை இருக்குமோ என்று சந்தேகப்பட்டு விசாரித்த‌தில், அதெல்லாம் இல்லை, ஒரு நாளைக்கு நாலுப்பேரை கடித்து கறியை எடுக்கும் அளவுக்கு ந‌ல்ல‌ ஹெல்த்தியாக‌த்தான் இருக்கிற‌து என்று சொன்னார்க‌ள்.

'எப்படி...' என்றேன்.

'ரொம்ப சிம்பில்... அது இந்த‌ கடை பஜ்ஜியை சாப்பிட‌ற‌தே இல்லையே...' என்றார்க‌ள்

'போதுமடா சாமி... ஆளைவிடுங்க...' என்று அதற்குமேல் அங்கே இருந்தால் கீழ்பாக்கத்தில் இடம் நிச்சயம் என்பதால் உடனே அங்கிருந்து அபீட் ஆனேன்.

(பி.கு: இதற்கும் நீங்கள் பஜ்ஜி சாப்பிடுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை... என்றாலும் சாப்பிடுவதற்கு முன் நாயைப்பற்றி யோசியுங்கள்)

1 comment:

Paul Venkat said...

aaniyee pudungavenaam...........