Friday 30 November 2012
Sunday 4 November 2012
ஆதிச்சொல்
ஆதிச்சொல்...!
ஆதிச்சொல்லொன்று
அல்லலுருகிறது
தன்னை யாரும் புழங்கவில்லை
என்று முறையிடுகிறது!
தான் பேசப்படுவதில்லை
என்று விசனப்படுகிறது
தான் எழுதப்படுவதில்லை
என்று வருத்தப்படுகிறது!
கம்பனும் வள்ளுவனும்
தன்னை உபயோகித்ததை
சொல்லி சொல்லி பெருமைப்படுகிறது!
தான் இனியும்
புழக்கத்தில் இருக்கமாட்டோமென்று
தீர்க்கமாய் நம்புகிறது!
ஒரு எழுதுகோலெடுத்து
தன்னையே அது
பக்கம் பக்கமாய் எழுதிபார்க்கிறது!
ஒரு மலையுச்சிக்குச்சென்று
தன்னையே அது
பலமுறை கூப்பிட்டுப்பார்க்கிறது!
மற்றவரிடம் அகப்பட்ட திருப்தி
அப்போதும் வராததால்
அங்கிருந்து குதித்து
தற்கொலை செய்துகொள்கிறது!
Friday 19 August 2011
அன்னா ஹஸாரே...!
அன்னா ஹஸாரே
செய்யுறது டாப்பு...
காங்கிரஸுக்கு
விழப்போகுது ஆப்பு...!
----------------------------------
உண்ணாவிரதம்
ஜனநாயக உரிமை!
ஏன் இல்லை
காங்கிரஸுக்கு பொறுமை!
ஊழலை அகற்றுவது
நம் கடமை!
இல்லையேல்
நமக்கிருக்காது உடமை!
----------------------------------
நீ ஊழலை அழிக்க
பாடுபடுகிறாய்!
பலர் உன்னை அழிக்க
பாடாய் படுகிறார்கள்!
----------------------------------
நீ உண்ணாவிரதம்
இருக்கிறாய்
ஊழல் உண்ணவர்களை
பிடிக்க!
----------------------------------
திரும்பிப் பார்க்கிறது
உலகம் உன்னை
திறந்து விடு நீ
ஊழல் ஒழிப்பின் கண்ணை!
----------------------------------
அன்னா ஹஸாரே
நல்லா கழட்டுறாரே
காங்கிரஸின் டெளசரை!
----------------------------------
ஊழலை ஒழிக்க
முயல்கிறவரை
ஒழிக்க முயல்கிறது
ஊழல்!
----------------------------------
Monday 8 August 2011
Saturday 22 January 2011
மூக்கு கயிறு...
'ம்ம்ம்மா...'என்று அலறியது அந்த இளம் மாடு அல்லது வயதான கன்றுகுட்டி. 'V' வடிவ இரு மரக்கிளைகளுக்கு நடுவே கழுத்தை கொடுத்திருந்தது இல்லை கொடுத்திருந்தார்கள். கழுத்தை மரத்தோடு பிணைந்திருந்தது கயிறு. வாயை சுற்றி சுருக்கிட்டு கட்டப்ப்ட்டிருந்தது. இருவர் பக்கவாட்டுக்கு ஒருவராக கொம்பில் ஒரு கையுமாய், கொண்டையில் ஒரு கையுமாய் இறுக்கிப்பிடித்திருந்தார்கள். அருகில் எதிரில் கோணூசியில் (சாக்கு தைக்கும் ஊசி) கோர்த்திருந்த சிகப்பு மூக்கு கயிறுடன் மற்றொருவர்.
மனிதர்களுக்கு வயது வந்து விட்டாலும், வராவிட்டாலும் காது, மூக்கு குத்துவது என்பது எப்படி ஒரு சடங்கோ, அதுபோல் இல்லை என்றாலும் கன்றுகுட்டிகள் அது காளையாக இருந்தாலும் கிடேரியாக(பெண் கன்றுகுட்டி) இருந்தாலும் எந்த பாகுபடுமின்றி பிறந்த 2 அல்லது 3 வருடங்களில் அதன் திமிறுக்கும், தினவுக்கும், ஆளை இழுத்து கீழே தள்ளிவிடுகிற வலுவுக்கும் ஏற்ற பருவத்தில் மூக்கு குத்தி கயிறு போட்டுவிடுவது வழக்கம். மனிதர்களுக்கு எப்படி காது குத்துதல் அக்குபங்சர் முறைபடி உடல் வளர்ச்சி கூறாக கருதுகிறோமோ அதற்க்காகவெல்லாம் மாடுகளுக்கு குத்துவது இல்லை. மாடுகளுக்கு பெரும்பாலும் காது குத்துவது இல்லை. முக்கு தான். எங்காவது காதில் தோடு மாட்டிய மாடு திரிந்தால் அது வங்கி கடனில் இருக்கிறது என்று அர்த்தம். அடையாலத்துக்காக மாட்டு கடன் வழங்கும் போது வங்கியிலிருந்து வந்து மாட்டுக்கு காது குத்திதோடு போட்டு விடுவார்கள். அதை தவிர எல்லா வீடுகளிலும் ஒரு சடங்காக செய்வது முக்கு குத்துவது தான்.
மூக்கு என்றால் ஐஸ்வர்யாராய் பச்சன் குத்தி இருப்பது போல குத்தி அஸ்மி வைரம் மாட்டுவது இல்லை. ஒருவேளை மாடுகள் தங்க மூக்குத்தியோ, வைர மூக்குத்தியோ போட்டு கொண்டால். பெண்களைப்போல் காது குத்தி பிளாட்டின நகைகள் அணிந்து நடமாட ஆரம்பித்தால்... "காந்தி அன்று சொன்னது போல என்றைக்கு ஒரு மாடு நகைகள் அணிந்து நள்ளிரவு தன்னந்தனியாக சாலையில் நடமாட முடிகிறதோ அன்று தான் இந்தியாவுக்கு சுதந்திர நாள்... இன்றைக்கு அப்படி அரொ நிலமை இருக்கிறதா... நன்றாக சிந்தியுங்கள் வாக்காளர்களே... நாங்கள் ஆட்சிக்கு வந்தால்..." என்று முக்கால் முழத்திற்க்கு முழங்கியிருப்பார்கள்... யார் கண்டா, கலைஞர் இலவச மாட்டு மூக்கித்தி திட்டம் அறிவித்தாலும் அறிவிக்கலாம். நல்ல வேளை அந்த கண்றாவியெல்லாம் நடந்து தொலைக்கவில்லை. மாடுகள் மனிதர்களிடத்திலிருந்து அந்த வகையிலாவது தப்பித்தன. விசயத்துக்கு வருவோம். ஐஸ்வர்யா மூக்கு போன்றோ, அல்போன்சா மூக்கு போன்றோ இல்லாமல் மடுகளுக்கு மூக்கு சற்றே வெளியே நீட்டியிருக்கும்... அதுவும் மூக்கின் இரு பகுதிகளையும் பிரிக்கும் குறுக்கு சதை நார்கள் "இந்தா குத்திக்கோ..." என்பது போல நன்றாக வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். அந்த தடுப்பு சதையை துளைத்து கொண்டு ஊசி அடுத்தப்பக்கம் வரும், அதன் கூடவே பின்னால் ஒரு நூல் கயிறு. ஆரம்பத்தில் மெலிதாக இருக்கும் அது போக போக பருமனாக இருக்கும். அதற்கு பெயரே மூக்கு கயிறு தான்...
மனிதர்களுக்கு காது குத்துவதற்கு ஆட்கள் இருப்பது போலவே, மாட்டுக்கு மூக்கு குத்த ஆட்கள் இருக்கிறார்கள். அதன் திமிரலுக்கு ஏற்றார்போல் எப்படி மூக்கை பிடிக்க வேண்டும், ஊசி குத்தும்போது வலியால் அதற்கு வரும் கோபத்தை எப்படி சமாளிப்பது, நரம்புகள் இல்லா மையப்பகுதியை தேர்ந்தெடுப்பது என்று அவர்களுக்கு சில நுட்பம் தெரியும். 'ஒரு வாரம் 10 நாளுக்கு மேச்சல் சரியா எடுக்காது, அப்புறம் சரியாயிடும், சரியாகலன்னா சொல்லு. தெனம் மூக்குல வெளக்கெண்ணையை போடு, இப்ப ஒரு க்வாட்டருக்கு பணத்த எடு...' குத்தியவன் கேட்பான். பத்திரிக்கை செலவு இல்லை. பந்தகால் இல்லை. மேள தாளம் இல்லை. ஆடு வெட்டி விருந்து இல்லை. விருந்தில் சாராயம் இல்லை. சாராயத்தால் சண்டை இல்லை. மாமன் மடி தேவையில்லை. (மாட்டுக்கு மாமனை தேடுவது என்பது நடைமுறையில் இருந்திருந்தால், அடடா எவ்வளவு பெரிய காமெடியாய் இருந்திருக்கும்) அதிக பட்சம் ஒரு க்வாட்டர் தான் செலவு. 'கண்ணுகுட்டி சுனப்பா இல்ல, தெளியவே இல்ல. வயித்துல பூச்சி இருக்கு. வீட்டுக்கு வா மருந்து தர்றேன். மொந்த வாழைப்பழம் ஒரு சீப் வாங்கி அதுகுள்ள மருந்த வச்சி டெண்டு நா கொடு. அப்புறம் பார் துள்ளி குதிக்கும்.' வந்த இடத்தில் தான் மாட்டு வைத்தியன் தான் என்பதை உறுதி செய்துவிட்டு வருமானத்துக்கும் ஒரு பிட்டு பொட்டு விட்டு போவார்.
அனுபவமில்லாதவர்கள் முக்கு குத்துவது என்பது கஷ்டம். புதியவர்கள் குத்தும் போது கன்றுகுட்டி வலியால் திமிரும் போது மறுகையால் ஊசியை வங்குகையில் கையில் குத்திவிடும் அபாயம் இருக்கிறது. விசும்பும் வேகத்தில் கொம்பு குத்துபவரின் மூக்கை பதம் பார்த்து விடும் வாய்ப்பும் இருக்கிறது. தாண்டிக்குதிக்கும் போது காலை மிதித்துவிடும் அபாயமும் இருக்கிறது. தவறி ஊசி நரம்பில் குத்திவிட்டால் ரத்தம் கொட்டும், நிக்காது. வலி தாங்காது மாடு கத்தும். புறையோடும், சலம் வைக்கும். சீக்கிரத்தில் ஆராது. மாடு ரண வெதனை அனுபவிக்கும். அதனால் விட்டில் இருப்பவர்கள் நிம்மதி போகும். பிறகு சில நாட்கள் எங்கோ இருக்கும் மாட்டாஸ்பத்திரிக்கு மாட்டை பிடித்து செல்ல வேண்டும். அதுவும் நடந்து தான் போக வெண்டும். இதையெல்லாம் பார்க்கையில் ஒரு க்வாட்டர் ஒன்றும் பெரிய விசயமில்லை... 'இதுக்கு போய் இந்த பண்ணாடைக்கு ஒரு க்வாட்டரா...' என்று மண்டையில் தோன்றும்.
மாட்டுக்கு வயது பார்த்து மூக்கு குத்துவது இல்லை. பொதுவாக எப்போது தேவை வரும் என்றால், எப்பொது அதன் வேகம் மட்டுப்படாமல் இருக்கிறதோ, எப்பொது அதை அதன் கழுத்தில் இருக்கும் கயிறை மட்டும் வைத்து அடக்க முடியாமல் போகிறதோ, எப்பொது கயிர் பிடித்துகொண்டு வருபவரை இழுத்து கீழே தள்ளுகிறதோ (பொதுவாக மாடுகள் இழுத்து கீழெ விழுபவர்கள் வீட்டு பெண்கள் தான். அது மாட்டுப் பெண்ணாகவோ இல்லை வீட்டுப் பெண்ணாகவோ இருக்கலாம், அது பற்றி அதெற்கென்ன கவலை வந்தது, அதுவல்ல முக்கியம். நாலு முறை கீழே விழுந்து, ஒவ்வொரு முறையும் வீட்டு ஆம்பளைகளிடம் இது பற்றி சொல்லி அவர்கள் கேட்காமல் கடைசியாக வெளக்கமத்தால் மொத்து வாங்கினால் தான் ஆம்பளைகள் மாட்டுக்கு மூக்கு குத்துவது பற்றியே யோசிப்பார்கள்.) அப்பொது தான் அது வயதுக்கு வந்துவிட்டதாக அர்த்தம். அதுக்கு மூக்கு குத்தும் காலம் வந்து விட்டது என்பது அறியப்படும். அதாவது அதை அடக்குவதற்க்கான பிரயோகம் அது. அதன் பிறகு சிறு குழந்தை கயிறு பிடித்து வந்தாலும் சாதுவாக வரும். போகும் இடங்களுக்கெல்லாம் சத்தமில்லாமல் வரும். மீறி திமிறினால் கயிறு இழுக்கப்படும், லேசாக சுண்டினாலே பொதும், மூக்கு வலிக்கும்... வலி தாங்காமல் சொன்ன பேச்சை கேட்கும். இது ஒரு அடக்கு முறை.
'நான் சொல்வதை நீ கேட்கவில்லையா... நீ கூட என்னை மதிக்கவில்லையா... அவ்வளவு திமிரா... நாயே, உன்னை என்ன செய்கிறேன் பார்...' என்ற மனித கோபத்தின் வெளிப்பாடு தான் மாட்டுக்கு மூக்கு குத்துவதும். யாரையும் தன்னை மீறி வளர விடுவதில் மனித இனத்துக்கு எப்பொதும் உடன்பாடில்லை.அப்படி வளர நினைப்பவர்களை எப்படி அடக்கலாம் என்று யோசிப்பதில் மனம் ஈடுபடுகிறது. அதன் விளைவு தான் மட்டுக்கு மூக்கு குத்துவது. மாடுகளைப்பொல மனிதர்களையும் மூக்குக் குத்தி, கயிறு போட்டு, கழுத்து கட்டியில் பிண்ணி, தலைகயிறு பிடித்து இழுத்து செல்லும் பாக்கியம் இருந்தால் எப்படியிருக்கும். யாரும் அடங்க மறுத்தல், அத்து மீறினால், அரசாங்கத்துக்கு எதிராக பேசினால், ஊழல் பற்றி வாய் திறந்தால், உடனே அவனுக்கு மூக்கு குத்தி, கயிறு மாட்டி, மரத்தில் கட்டி புன்ணாக்கு போடுவது. இன்ன தேதியில், இந்த நேரத்தில், இன்னாரது மகன் திருவளர்செல்வன் சுரேஷ்குமாருக்கு மூக்குகுத்து என்னும் அடக்கும் விழா நடைபெற இருக்கிறது. அனைவரும் வந்திருந்து ஆசி வழங்குமாறு கேட்டு கொள்கிறோம் (குறிப்பு: மொய்முறை நிறுத்தப்பட்டது). இந்த மாதிரி பத்திரிகை அடிக்க நம் அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே இந்த் தேசத்தில். இது என்ன நியாயம். என்ன ஜனநாயகம் இது. 2ஜியாவது 3ஜியாவது, எந்த ஊழலைப் பற்றியும் யாரும் வாய் திறந்து பேச முடியுமா.இது ஒரு துரதிஷ்டம் தான் அரசில்வாதிகளுக்கு. போகட்டும். பிழைத்து போகட்டும் மக்கள்.
இப்படி அந்த வாயில்லா ஜீவனை அடக்கி விடுவது என்று தான் கையில் ஊசியோடு நின்று கொண்டிருக்கிறார் மூன்றாமவர். 'உங்க காலை தள்ளி வைச்சுக்கோங்கோ... மாட்டு தலைய மரத்தோட சேர்த்து அணைச்சு பிடி... குத்தும் போது வலியில துள்ளும் விட்டுறாம புடிங்க... இல்லன்னா உயிர் சேதம் ஆயிடும்...' கட்டளைகளை அருகில் இருந்தவர்களுக்கு கொடுத்தபடியே கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரல் கொண்டு மாட்டு மூக்கின் தடுப்பு சதையில் தடவி, நெருடி பார்த்தார். சரியான இடம் இது தான் என்பதையும், மையமான இடம் தான் என்பதையும் உறுதி செய்து கொண்டு, கையிலிருந்த ஊசியை 'சரக்' என்று இந்த பக்கம் குத்தி மறுபக்கம் இழுத்தார். உடல் சிலிர்த்து, உயிர் வெறுத்து, காது மடல் விறைத்து, துள்ளி குதித்து, வலியால் துடித்து 'ம்ம்ம்மா...' என்று அலறி அடங்கியது, அடங்குவதற்க்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த அந்த இளம் மாடு.
Subscribe to:
Posts (Atom)