இந்த தொடர் கட்டுரை யாரையும், எதையும் நம்ம வைக்கவோ, எதுவோ இருக்கிறது என்று கூறுவதற்க்காகவோ, வலியுறுத்துவதற்க்காகவோ இல்லை... இதெல்லாம் எனக்கு தெரிந்து, என் முன்னால் நடந்தவை... அந்த பிரமிப்பை பகிர்ந்து கொள்ளவே இங்கே எழுதுகிறேன்... என்ன நடந்ததோ அந்த விசயங்கள் எப்போதும் போலவே விவாத மேடையின் விவாத கருவாகவே இருந்து விட்டுப் போகட்டும்... நான் தொடர்ந்து இந்த விசயத்தை நம்பாதவனாகவும், நம்பாமல் இருக்க முடியாதவனாகவும் தான் இருக்கிறேன்.
எங்கள் குடும்ப நண்பர் அவர்... ஒரு மேடை நாடக நடிகர். அவருடைய வீட்டில் நடந்த சம்பவம் ஒன்று. அவரின் இரண்டாவது பெண்ணிற்கு அப்போதுதான் திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகியிருக்கும்... அப்போது தன் தாய் வீட்டுக்கு வந்திருந்த அந்த பெண்ணிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனது... அதாவது
உடம்பு வெட்டி வெட்டி இழுக்கும்... அந்த பெண் சுய நினைவை இழந்துவிடுவாள்... ஏதேதோ கத்துவள்... கொஞ்ச நேரம் அப்படியே இருக்கும், சிறிது நேரத்தில் எல்லாம் சரியாகி சுயநினைவு வந்து சகஜ நிலைக்கு வந்து விடும் அந்த பெண்... இது இடைவெளி விட்டு தொடர்ந்து வந்து கொண்டிருந்தது... நண்பர் பெண்ணை மனநல மருத்துவர் மற்றும் நரம்பியல் மருத்துவரிடன் காட்டினார்... அவர்கள் பரிசோதித்துவிட்டு எந்த நோயும் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என்று கூறி விட்டு மன நிறைவிற்காக சில மருந்து மாத்திரைகளை பரிந்துரைத்தார்கள்... ஆனாலும் அந்த பெண்ணிற்கு தொடர்ந்த இடைவெளியில் அந்த இலுப்பும் அதை தொடந்த விசயங்களும் நடந்த வண்ணமே இருந்தது... ஒரு சில மாதங்களிலேயே நிலமை இன்னும் விபரீதமாய் போய் தொடர்ந்து வர ஆரம்பித்தது... கூடவே உடம்பெல்லாம் எரிவதாக கூறி அந்த பெண் அழுது கொண்டே ஆடைகள் முழுவதையும் அவிழ்த்து எறிய தொடங்கினாள்... ஆம்பளைகள் யாரும் அவர் வீட்டுக்குப் போக முடியவில்லை... நிலமை மோசமாகிகொண்டு போனது... என்ன செய்வது என்று தெரியவில்லை... நண்பர் மிகவும் மன உளைச்சலில் இருந்தார்.
அந்த நேரத்தில் தான் ஒரு நபர் ஒரு மந்திரவாதியை பரிந்துரை செய்தார்... எங்களுக்கு அதில் நம்பிக்கையில்லை என்றாலும் என் நண்பருக்கு வேறு வித யோசனை... எதை தின்றால் என்ன, பித்தம் குறைந்தால் சரிதானே என்பது அவர் எண்ணம்... அவரின் நிலமை அப்படி ஒரு இக்கட்டில் இருந்தது... சரி அதையும் பார்த்து விடலாமே என்று அந்த மந்திரவாதியை அழைத்து வந்தோம்... அவர் கேட்ட பூஜை சாமான்கள் அனைத்தும் வாங்கியாயிற்று... அதில் ஒரு உயிர் கோழியும், குவாட்டர் பிராந்தியும் அடக்கம்... பூஜை தொடங்கியது... அவருக்கு எதிரே அமர்ந்திருந்தது அந்த பெண்... மந்திரவாதி மந்திரங்கள் சொல்லியபடி நெருப்பில் சாம்பிராணியைப் போட, கூட வந்தவர் அதற்கு தகுந்தாற்போல் உடுக்கடித்தார்... சிறிது நேரத்தில் இடம் புகை மண்டலமானது... மந்திரமும், உடுக்கு சத்தமும் சூழ்நிலையை இருக்கமாக்கியது... மந்திரவாதி அதட்டியப்படி அந்த பெண்ணிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தார்... அந்தப்பெண் அசரவில்லை, இவரை மதிக்கக்கூட இல்லை... மேலும் முயன்ற அவர் கோபம் கொண்டவராக பையிலிருந்து அதை எடித்தார்... அது தோலினால் ஆன சாட்டை... 'யார் நீ... எங்கிருந்து வந்திருக்கிறாய்... உனக்கு என்ன வேண்டும்... பேசாதவரை உன்னை விட மாட்டேன்...' என்றபடி சாட்டையால் அடிக்க ஆரம்பித்தார்...
சுற்றி வேடிக்கைப் பார்த்த கூட்டம் பயந்து மிரண்டு போனது... அடிக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அந்த பெண் பேச ஆரம்பித்தாள்... ஏதோ ஒரு ஊரைச் சொல்லி அந்த ஊரிலிருந்து வந்ததாகவும், ஏதோ ஒரு பெயரை சொல்லி அது தான் தன் பெயர் என்றது. எங்களுக்கு எதுவும் புரியவில்லை... பின் விசாரித்தப்போது, அந்த பெண்ணின் திருமணத்தின் போது, நண்பரின் உறவினர் பெண் ஒருவர் அந்த ஊரில் இருந்து வந்தது தெரிய வந்தது... அந்தப் பெண்ணும் அங்கேயா இருந்ததால், கூப்பிட்டு விசாரித்ததில் கிடைத்த அதிர்ச்சியான தகவல் இது... அந்த பெண் இருந்த ஊரில், இந்த பெண்ணின் வீட்டுக்கு அருகில் சமீபத்தில் ஒரு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாம்... அந்த பெண்ணின் பெயரும், பாதிக்கப்ப்ட்ட பெண் சொன்ன பெயரும் ஒன்றாக இருந்தது... மேலும் அந்த உறவுகாரப் பெண்ணின் மூலமாகத்தான் இங்கு வந்ததாகவும் மந்திரவாதியிடன் சொல்லிக்கொண்டிருந்தது நண்பரின் மகள்... அந்த உறவுகாரப் பெண்ணிற்கு இதை கேட்டு அதிர்ச்சி. அந்த சம்பவத்தை இங்கு யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பகிர்ந்துகொள்ளவேவில்லை என்றும் அடித்து பேசினார் அவர். 'இங்கிருந்து போய்விடு...' என்று மந்திரவாதி மீண்டும் சாட்டையால் அடிக்க ஆரம்பித்தார்... ஆரம்பத்தில் அடம்பிடித்த அந்த பெண், அடி அதிகமாகவே இங்கிருந்து சென்றுவிடுவதாக ஒத்துக்கொண்டு, ஊர் எல்லையில் கொண்டு வந்து விடச் சொன்னாள்... சரி என்று சம்மதித்த மந்திரவாதி, கிழம்பச்சொன்னார்.
உடனே எழுந்து ஓட ஆரம்பித்தது அந்த பெண்... பின்னால் சாட்டையுடன் மந்திரவாதி ஓடினார்... அவர்கள் பின்னால் ஊரே ஓடியது... சரியாய் அந்த கிராமத்தின் எல்லைப்பகுதி வந்தவுடன் அந்த பெண் நின்றது... தனக்கு சேர வேண்டியதை கேட்டது... உடன் மந்திரவாதி பிராந்தி பாட்டிலை கொடுத்தார்... அதை வாங்கிய அந்த பெண் அசால்ட்டாக திறந்து கடகடவென குடித்தாது... அடுத்து கோழியை வாங்கி அதன் கழுத்து பகுதியை வாயால் கடித்து தலையை துண்டாக்கியது... பின் அதன் ஒரு பகுதியிலிருந்து கொட்டிய ரத்தத்தை அப்படியே குடித்தது... திடீரென 'வீல்..' என்ற பெரிய அலறல் சத்தம். அடுத்த வினாடி அந்த பெண் மயங்கி கீழே விழுந்து விட்டாள்... பிறகு அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப, மெதுவாக எழுந்த பெண் கேட்ட கேள்வி இருக்கிறதே.. அது.. 'நான் ஏன் இங்கே வந்தேன்... இங்கே ஏன் இவ்வளவு கூட்டம்... என்ன நடக்குது இங்கே...' என்பது தான். 'ஆள உடும்மா தாயே...' என்று எல்லோரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்... அதற்குப் பிறகு அந்த பெண்ணிற்கு இன்று வரை அந்த பழைய பிரச்சனை வரவே இல்லை... இப்போது சொல்லுங்கள், நடந்தது என்ன...?