Monday 7 December 2009

கண்ணாடி போட்டவனெல்லாம் கதாநாயகனா!



தினம் தினசரிகளை புரட்டினால் பக்கம் பக்கமாய் விளம்பரங்கள்... எல்லாம் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் திரைப்படங்களின் வரிசைதான்... இதில் நடிப்பவர்கள் யார்? இயக்குனர் யார்? தயாரிப்பாளர் யார்? எதுவும் தெரியாது... எந்த விளம்பரமும் இல்லாமல் திடுதிப்புவென்று இப்படி புற்றீசல் போல் தினம் ஒரு படம் வெளிவந்தாலும் அதில் எத்தனை தலை தப்புகிறது என்றால் நூற்றில் ஒன்றோ இரண்டோ தான்... மீதி எல்லாம் தோல்விதான்... காசை இறைத்து கலர் கனவுகளோடு வந்த படங்கள் இப்படி காணமல்போனால் நஷ்டம் முழுதும் தயாரித்தவருக்குத்தான்... எப்படிப்போனாலும் குறைந்தபட்சம் ஒரு கோடியாவது தேவைப்படும் ஒரு சின்ன பட்ஜெட் படம் எடுக்க... படம் தோல்வி என்றால் அது மிகப்பெரிய நஷ்டம்... எப்படி இது சத்தியம்... இதை எடுத்தவரின் நிலைமை என்னவாகும்... கஷ்டப்பட்டு கடன் வாங்கி கடனளியாகிரார்களா... கருப்பை கணக்கு காட்ட படம் எடுத்து நஷ்டம் அடையவேண்டும் என்று எடுக்கிறார்களா... சினிமா பற்றி தெரியாமல் இயக்குனர்களின் மகுடிக்கு மயங்கி மாட்டி கொள்கிறார்களா... இது பற்றி யோசித்தால் மிகப்பெரிய கேள்வி தான் நம் எதிரே நிற்கும்...

இது போன்ற படங்களை இயக்கி, ஆள் மாட்டினால் அவர்கள் தலையில் ஆம்லேட் போட்டு விட துடிக்கும் இயக்குனர்களே, கொஞ்சம் யோசியுங்கள்... எதோ ஒரு படத்தை இயக்கி இயக்குனர் ஆகி விட வேண்டும் என்று நினைக்காமல், படத்தின் கதை என்ன... அது நிற்குமா... அதற்குப்பின் நாம் நிற்போமா... நடிப்பவர் யார்... அவருக்கு நடிக்கத்தெரியுமா என்பதைஎல்லாம் யோசியுங்கள்... படம் தோல்வி என்றால் இழக்கப்போவது நீங்கள் இல்லை ஆனால் இதனால் சிலர் இழப்பது மட்டுமல்ல இறக்கவும் கூடும் என்பதை நினைவில் வையுங்கள்...



இது ஒருபுறமிருக்க இது போன்ற படங்களில் நடிப்பவர்களின் அட்டகாசம் இருக்கிறதே அது தான் மூளையில் மூஞ்சிரு நுழைஞ்ச மாதிரி எப்பவும்  குடைச்சல் கொடுக்கும் விஷயம்... இந்த படங்களில் நடித்த நாயகர்களை இதற்குமுன் யாரும் பார்த்ததில்லை... இனியும் யாரும் பார்க்கவும் முடியாது... அப்படியிருந்தும் முகத்தில் கருப்பு கண்ணாடியை அணிந்து கொண்டு அவர்கள் கொடுக்கும் அலப்பறையும், கத்தி கத்தி சவால் விடும் தோரணையும், விசிறி விசிறி நடக்கும் பாவணையும்... என்ன நினைக்கிறார்கள் இவர்கள்... உலகம் முழுதும் இவர்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றா... என்ன கொடுமையடா சாமி...  கொஞ்சம் காசை கொடுத்து விட்டு ஹீரோவாக நடிக்க வந்ததால் இவர்களை கேள்வி கேட்க முடியாமல் முடங்கி போகிறார்களா இயக்குனரும் தயாரிப்பாளரும்...  நல்ல நிலையிலிருக்கும் நடிகர்கள் கூட இந்த அளவுக்கு அலம்பல் செய்வதில்லை... எடுத்தவுடன் இவர்கள் ஆக்சன் ஹீரோதான்... இதில் பன்ச் டயலக் வேறு... படத்தில் எங்காவது கொஞ்சமாவது நடிக்க முயற்ச்சிக்கிறார்களா என்றால் அது தான் இல்லை...

இது போன்ற படங்களை நாம் பார்க்க நேரிட்டால் காசு கொடுத்து கடப்பாறையை வாங்கி காதில் விட்டு கிட்டா போல தான்... அடுத்த கணமே நமக்கு கண்ணுல கசாயம் பட்ட மாதிரி எரிச்சலும், முள்லெலும்புல முள்ளு குத்தின மாதிரி கோவமும் வரும்... என்ன செய்யறது கஷ்டம் வந்தா சொல்லிட்டா வருது...

அது சரி நடிக்கத் தெரியாதவர்களையும், இயக்கத் தெரியாதவர்களையும் வைத்து படம் எடுத்து அவர்கள் நஷ்டம் அடைவது மட்டுமல்லாமல் நம்மையும் கஷ்டப்பட வைக்கும் தயாரிப்பாளர்கள் எப்போது உணர்வார்கள் கொட்டும் குப்பையெல்லாம் குன்றாகது என்பதை...!

No comments: