Friday 1 January 2010

சர்வதேச தரத்துடன் சென்னை விமான நிலையம்!


தலைப்பை படித்துவிட்டு அதிர்ச்சியில் ஆர்ட் அட்டாக் வந்தால் அதற்கு நான் சத்தியமாய் பொறுப்பு ஏற்க முடியாது... சர்வதேச தரத்துடன் தான் இல்லை சும்மா அப்படி சொல்லியாவது பார்த்துக் கொள்ளலாமே என்ற ஆசைத்தான், வேறொன்றுமில்லை!

உறவுக்காரப் பையன் மேற்படிப்புக்காக சிங்கப்பூர் செல்ல சென்னை வந்திருந்தான்... 'பையனுக்கு ஒன்றும் தெரியாது... பார்த்து அவனை அனுப்பி வை...' என்று சொல்லியிருந்தார் போனில் அவன் அப்பா... எனக்கு கொஞ்சமாவது விசயம் தெரியும் என்று ஒத்துக்கொள்ள உலகில் ஆளிருக்கிறதே என்று பெருமையாயிருந்த்து... அதனாலோ என்னமோ சிங்கப்பூருக்கு செல்லவெண்டிய பையன் ஏர்போர்ட் வருவதற்கு முன்னமே நான் அங்கு போய் சேர்ந்து விட்டேன். 'அண்ணே... லேட்டாயுடுச்சி... இன்னும் அரைமணி நேரத்தில் வந்துவிடுகிறேன்...' என்றான் போனில் பையன். கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போன க‌தையா என்ன‌ செய்ற‌‌துன்னு தெரியாம‌ நின்றிருந்தேன்...

விமான‌ நிலைய‌ க‌ட்டிட‌த்தின் புண்ணிய‌த்தில் எரித்த‌ வெயில் முழுவதும் நிற்பவர்களின் தலையில் அக்னி ஏவுகணையாக தாக்கியது... நடைபாதை வராண்டா முழுவதும் தடுப்புபோட்டு பார்வையாளர்களை உள்ளே விடாமல் காவல் காத்தார்கள்... பார்வையாளர்கள் வெளியேதான் நிற்கவேண்டும்... வெயிலுக்கே இப்படி என்றால், மழைக்கு... நம் பாடு படு கேவலமாகிவிடும்... வெளியூர் காரர்கள் காறி நம் மோரையில் துப்பிவிட்டு போவார்கள், 'உங்களுக்கெல்லாம் விமான நிலையம் ஒரு கேடா...' என்று. இது இப்படியிருக்க பக்கத்திலிருக்கும் ப்ளாட்பார்ம்கள் சிமெண்ட் பெயர்ந்து பள்ளம் பள்ளமாக இலவசமாக மழைநீர் சேமிப்பில் ஈடுப்பட்டிருந்தன... ஏறகனவே ரோடுகள் அப்படித்தான் இருந்தாலும் இவர்களாக வேறு இன்னும் கொஞ்சம் ஸ்பீட் பிரேக் போட்டிருந்தார்கள்... திரும்பும் இடமெல்லாம் மேஜரான பொண்ணுக்கு தென்னை ஓலையில் மரவடம் கட்டுவது மாதிரி பைபர் சீட்டுகள் வைத்து மறைத்திருந்தார்கள்... சுற்றிலும் குப்பையும் கூலமுமாய் பிச்சை எடுக்க பெருமாள் கோவிலுக்கு போன மாதிரி தான் இருந்தது பீலிங்.

இந்தியாவில் மும்பை மற்றும் டில்லிக்கு அடுத்தபடியாய் அதிக விமான போக்குவரத்து உள்ள பிஸியான விமான நிலையம்... சரக்கு போக்குவரத்தில் மும்பைக்கு அடுத்தபடியாக இர‌ண்டாவது இடத்தில் உள்ள ஒரு விமான நிலையம் ஏன் இப்படி கேட்பாரற்று கிடக்கிறது... இதை திரும்பிப் பார்த்து கவனம் செலுத்த ஏன் அரசு தயாராகயில்லை... மெரினாவை அழகு படுத்திவிட்டு கூவத்தை காவு கொடுக்க வேவுபார்த்துக் கொண்டிருக்கும் துணை முதல்வர் ஸ்டாலின் இதை கொஞ்சம் கவனித்தால் நம் தமிழக மானம் தினம் தினம் விமானம் ஏறுவது காப்பாற்றப்படும்.

விசயத்துக்கு வருகிறேன்... 30 நிமிடங்களை கடத்த வேண்டுமே என்கிற கவலையில் ஒரு ஓரமாக தடுப்பு கம்பியில் சாய்ந்து நின்று கொண்டேன்... எனக்கு பின்னால் நின்றிருந்த வாயில்காப்பாளர் ரொம்பவும் சின்சியர் என்பது தெரிந்தது... விமான நிலைய அதிகாரிகள், ஏர் ஹோஸ்டஸ் என்று யாரையும் விடவில்லை அவர்... நிறுத்தி அவர்கள் ஐ.டி கார்டில் இருக்கும் முகமும் அவர்கள் முகமும் ஒன்றுதானா என்று பார்த்து பார்த்துதான் உள்ளே அனுப்பினார்... வருபவர்களும் கோபமேயில்லாமல் பொறுமையாய் அவருக்கு ஒத்துழைத்தது என் செயல்களை மறுபரிசீலனை செய்ய வைத்தது... என் அலுவலக முன் கேட்டில் என்னை மறைக்கும் காவலாளியை 'நீ யாரடா என்னை சோதிப்பது... நான் யார் தெரியுமா...' என்பதுபோல் பார்ப்பதை நினைத்து அப்போது வெட்கப்பட்டேன். நான் இதை மாற்றிக்கொள்ள இங்கே பாடம் கிடைத்திருக்கிறது.


எனக்கு முன் சற்றுத்தள்ளி 'ப' வடிவ சுற்றுச்சுவருக்குள், மண் மூட்டைகளுக்கு மத்தியில் நின்றிருந்தார் ஒரு தேசிய பாதுகாப்பு படை வீரர்... தோலில் துப்பாக்கி வேறு... யார் பேச்சு துணையும் இல்லை... அவருடைய கூறிய கவனம் மட்டுமே அவருக்கு துணை... 30 நிமிட காத்திருப்புக்கே இப்படி இஞ்சி தின்ற குரங்காட்டம் நின்றிருக்கிறேனே... நாள் முழுதும் இவர் இப்படியே நிற்கிறாரே... அதற்கு எவ்வளவு பொறுமை தேவை... இங்கேயே இப்படியென்றால் ஆள் நடமாட்டமேயில்லாத காஷ்மீர் எல்லையில் தனியே, தன்னந்தனியே நிற்பவர்களை நினைக்கையில் மயிர் கூச்செரிகிறது... இது எவ்வளவு பெரிய தியாகம்... மனதுக்குள் அவருக்கு ஒரு சல்யூட் அடித்து மரியாதை செய்தேன்.

'க்ளாக் ரூம் எங்கயிருக்குன்னு மட்டும் சொல்லுங்க... நீங்க கூட வரவேண்டாம்...' என்ற பிரயாணியை

'நீ இதுக்கு காசெல்லாம் கொடுக்கவேண்டாம்பா... சும்மா வா.. நான் காட்டுறன்...' என்று கரிசனையாய் பேசி அழைத்துக்கொண்டு போய்க் கொண்டிருந்தார் ஒரு  டாக்ஸி ட்ரைவர்.

ஒரு ஹிந்திவாலா என்னை நோக்கி வந்தார்... அவரும் 'க்ளாக் ரூம் எங்கே இருக்கிறது...' என்றார். நான் அந்த ட்ரைவர் போன திசையை காட்டினேன்...

'ஏன் க்ளாக் ரூமை உள்ளே வைக்காமல் வெளியே வைத்திருக்கிறார்கள்... அங்கே எப்படி பெட்டியை நம்பி வைப்பது... அது எங்கேயிருக்கிறது என்று ஒரு வழிகாட்டி பலகை கூட இல்லை... என்னைபோல் எவ்வளவு பேரு கஷ்டப்படுவாங்க‌...' என்று பேச்சை புலம்பலோடு தொடர்ந்தார்...

'ரெனோவேச‌ன் வொர்க் ந‌ட‌க்கிற‌து அதான்...' என்று ச‌மாளித்தேன்.

அவ‌ர் நியூசிலாந்திலிருந்து ம‌லேசியா வந்து அங்கிருந்து சென்னை வந்திருக்கிறார். இங்கிருந்து டெல்லிக்கு அவருடைய கனெக்டிங் ப்ளைட் இன்னும் ஐந்து மணி நேரம் கழித்து தானாம்...

'ஊர் டெல்லியா...' என்றேன்.

'இல்லை பஞ்சாப்...' என்றவர் தொடர்ந்து 'வெரி ப்யூட்டிபுல் ப்லேஸ்...' என்று முடித்தார்.

எனக்கு அப்போது தான் பொறிதட்டியது... யாரவது வெளி நாட்டிலோ, வெளி மாநிலத்திலோ நம்மிடம் நம் ஊர் பற்றி கேட்டால், நாம் ஏன் இது மாதிரி 'தமில்நாட்... வெரி வெரி ப்யூட்டிபுல் ப்லேஸ்...' என்று சொல்வதில்லை... இனி கண்டிப்பாக இப்படித்தான் சொல்ல வேண்டும் என்று சபதம் எடுத்துக்கொண்டேன்(நீங்களும் எடுத்துக்கங்க!).

'ஐந்து மணி நேரம் சுற்றுவதற்கு சென்னையில் ஜில்லுன்னு ஒரு இடம் சொல்லுங்கள்...' என்று அடுத்த அம்பை வீசினார். நானும் முட்டிப்போட்டு முன்னூறு முறை யொசித்து யொசித்து சென்னையில் ஜில்லுன்னு ஒரு இடம் கிடைக்காமல் ஆடிப் பொய்விட்டேன்... எந்த இடத்தை சொல்வது (நீங்களாவது சொல்லுங்கள், அடுத்த முறை சுதாரித்து கொள்கிறேன்!)... தி.நகர் ரெங்கநாதன் தெருவிற்கு அனுப்பி  அரப்பரையை கொடுக்கலாம் என்று சோசித்து, அது நம்மை மேலும் அசிங்கப்படுத்துகிற காரியம் ஆதலால் கிடைத்ததடா இடம் என்று ஸ்பென்ஸர் ப்ளாஸாவை பரிந்துரை செய்தேன். (நிம்மதியப்பா...)

'வெளி நாடுகளுக்கு ஆள் அனுப்பும் வேலையைத்தான் செய்கிறேன்... உங்களுக்கு தெரிந்தவர் இருந்தால் சொல்லுங்கள்...' என்றார்

'எந்த நாட்டுக்கு...' என்றேன்.

'உலகத்துல எந்த நாட்டுக்கு வேனா... யூ.எஸ், யூ.கே, கனடா, ஆஸ்திரேலியா...' என்றவரை மறித்தேன். அரண்டவனுக்கு ஆண்டவன பார்த்தாலும் அலர்ஜிங்கற மாதிரி அவரை ஏற இறங்க பார்த்தபடி

'ஆளவுடுப்பா சாமி... இந்த விளையாட்டுக்கு நான் வரலை...' என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது உறவுக்காரப் பையன் வந்து விட்டான்... அத்துடன் பஞ்சாபிகாரருக்கு நான் பிரியாவிடை கொடுத்து அனுப்பிவிட்டு, அடுத்து நம்ம பையனுக்கு பிரியாவிடை கொடுக்க ஆயத்தமானேன்.

(அதற்கு பிறகு நடந்ததையும் எழுத ஆசை தான், நீங்கள் எங்கே எழுந்து போய்விட்டு இனி மார்கழி பாக்கமே தலை வைத்து படுக்க கூடாதுன்னு முடிவெடுத்து விடக்கூடாது என்பதால் விட்டுவிட்டேன்... பிழைத்துப் போங்கள்!)

4 comments:

shaan said...

இது பரவாயில்லை நண்பரே, மும்பை ஏர்போர்ட் புதிதாக்கும் போது நான் அங்கு ரொம்ப கஷ்டப்பட்டேன். சென்னையிலாவது எந்த ஃப்ளைட் எங்கே என்று ஒழுங்காக அறிவிப்பு செய்கின்றனர். ஆனால் மும்பையில் ஒரு வாசலை டிக்கெட்டில் குறிப்பிட்டுவிட்டு 4 மணி நேரம் தாமதமாக ஃப்ளைட் இன்னொரு வாசலுக்கு வந்து நின்றது, அதை அறிவிக்கவும் இல்லை புத்திசாலிகள். ஆனால் அது நடந்தது 2007இல். இப்போது ரொம்ப நல்ல இருக்குன்னு சொல்றாங்க. போய் பார்த்தா தான் தெரியும்.

பெரிய ஊர்களில் சிட்டி சென்டர் என்று ஒன்று இருக்கும் ஆனால் சென்னையில் அது போன்ற மையமான இடம் ஒன்று இல்லாதது ஒரு குறை தான். மெரினாவை அழகுபடுத்தியதோடு அந்த சாலையை முழுமையாக பொழுபோக்குக்கான ஒன்றாக மாற்றினால் நல்லது. முக்கியமாக மையமான இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் கமிஷனர் அலுவலகத்தை புது சட்டசபை கட்டும் இடத்துக்கு மாற்றினால் நல்லது.

NONO said...

பல நாடுகளில் பயணிகள் இல்லதவர்கள் விமாணநிலையத்தக்குள் உள்ள கடைகள் உணவுதிடுதிகள் மற்ற அலுவலகங்களுக்கு செல்லலாம். புறப்பாடு மய்யத்துக்குள்தான் செல்லமுடியாது! check in வரை யாரும் போலாம்!

Anonymous said...

one of the world worst airport i ever seen in my lifetime.i was in india 2007 for my sister wedding.i thought chennai airport is better but it is very worst than any airport in the world.Then how they got ISO 9001 for their condition?,i am a canadian and like to visit to india not to use CHENNAI AIRPORT next summer vacction.i dont want to use this AIRPORT(?)in my life time.I still remember that stinky smell when i was landed and breath this smell.it was too bad

Anonymous said...

first they must renew their airport otherwise all people will comment about this airpor