Monday 4 January 2010

புத்தக கண்காட்சியும், கமலும்!


ஞாயிற்றுக்கிழமை, கமல் வருகை இவை இரண்டும் போதும் புத்தக கண்காட்சி களைகட்ட... அல்லோல கல்லோல பட... கட்டியது... பட்டது... பைக் போட இடமின்றி ஆங்காங்கே வழியிலேயே நிறுத்திவிட்டு சென்றார்கள்... சென்றேன்... ஆறுமணிக்கு ஆர்ப்பாட்டமாக இருக்க வேணடிய மேடை வெறுச் சோடிகிடந்தது... முதல் நாள் வந்து கணிசமான புத்தகங்களை வாங்கி சென்றிருந்தாலும் மறுபடியும் அதே உற்சாகத்தோடு உள்ளே நுழைந்தேன்... புத்தகம் வாங்குவதில் இருக்கும் சந்தோசம் உண்மையில் அலாதியானது (வாங்கியதையெல்லாம் படிக்கிறோமா இல்லையா என்பதெல்லாம் பிரச்சனையே இல்லை இங்கே...)

ஸ்டால்களில் நிரம்பி வழியும் கூட்டம் ஊடகங்கள் எந்த ரூபத்தில் எத்தனை வந்தாலும் புத்தகம் படிப்பதில் இருக்கும் காதல் எப்போதும் குறையாது என்பதை பறைசாற்றியது... மற்ற வியாபார கேந்திரங்களைப் போலவே இங்கும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்... நான்கு வாங்கினால் ஒன்று இலவசம்... ஆறு வாங்கினால் ஒரு ஸ்க்ராட்ச் கார்ட் இலவசம் என்று உக்திகள் புகுத்தியிருப்பது நிச்சயம் நல்ல விசயம்... மெகா டிவி ஸ்டாலில் போகிற வருகிறவர்களுக்கு விளம்பர அட்டை கொடுத்து இடத்தை குப்பையாக்கினார்கள்... BSNL ஸ்டாலில் 3ஜி கார்டை வாங்கினால் ஒரு வால் கிளாக் இலவசம் என்று கூவி கூவி விற்றார்கள்... இவர்களிடம் 2ஜி கார்ட் வாங்கினாலே அது எப்போதும் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருக்கும்... இதில் இது வேறயா... புத்தகம் விற்கும் இடத்தில் ஏன் தான் இவற்களுக்கெல்லாம் யார் ஸ்டால் கொடுத்து (பாலிடிக்ஸ் பாஸ்...) நம்ம உயிரை வாங்குகிறார்களோ...

கால்வாசி ஸ்டால்கள் ஆன்மீக ஆசிரமவாதிகளிடம் சரணாகதியாயிருந்தது... கிட்டதட்ட எல்லா ஸ்டால்களிலும் ஈழ வாசனை வெஞ்சாமரம் வீசியது... பாலகுமாரன், பிரபஞ்சன், சா.கந்தசாமி, எஸ்.ராமகிருஷ்னன், மனுஷ்ய புத்திரன் என்று எழுத்தாளர்களை தாராளமாகப் பார்க்கவும், சந்திக்கவும் முடிந்தது.


மணியை பார்த்துவிட்டு வெளியே வந்தால் மேடையில் கமல் இருந்தார்... ஸ்டாலின் குணசேகரன் பிடியில் மைக் திண்டாடியது... நன்றாகவும், சரளமாகவும் அவர் பேசினாலும் யாரும் கேட்கும் நிலையில் இல்லை... அவரும் இவர்களை விடுவதாக இல்லை... நாலில் ஒன்று பார்த்து விடுகிறேன் வா என்று விடாமல் பேசினார்... கடைசியாக ஒன்று சொல்கிறேன் என்று சொல்லி சொல்லியே நிறைய சொன்னார்... கைதட்டி கைதட்டி அவரை வழியனுப்ப பார்த்த கூட்டம் கோபத்தின் உச்சிக்கே சென்றது... பல பேச்சாளர்களுக்கு ஏனோ தெரியவில்லை மைக் முன்னால் எவ்வள்வு நேரம் நிற்கிறோம் என்பதைவிட எவ்வளவு நேரம் கேட்பவர்களின் மனதில் நிற்கிறோம் என்பது தான் முக்கியம் என்பது (அப்பாடா... ஒரு தத்துவத்த சொல்லியாச்சுப்பா... எழுதுற‌து முக்கியமில்லை... படிக்கிறவன் எழுந்து ஓடமா இருக்கறது ரொம்ப‌ முக்கியம் என்று நீங்கள் கூறுவது என் காதில் விழவில்லையே...)

ஒரு வழியாக கமல் மேடைக்கு வந்தார்... அவர் முகத்தில் இருந்த வசீகரம் எதிரேயிருப்பவர்களை கவர்ந்திழுத்தது உண்மை... இலக்கியமும், சினிமாவும் என்ற தலைப்பில் பேச வந்ததாக சொல்லிவிட்டு, தான் பேசுவதற்கு ஏதும் தயார் செய்து கொண்டு வரவில்லை என்றார். பன்முகம் கொண்ட ஒரு கலைஞனின் முதிர்ந்த, ஆழ்ந்த பேச்சை கேட்க ஆவலோடு வந்தவர்களுக்கு இது பெருத்த ஏமாற்றமாயிருந்தது... இருந்தும் எதாவது பேசுவார் என்று காத்திருந்தவர்களின் இதயத்தில் இடிதான் விழுந்தது... ஏதேதோ பேசினார்... பாலகுமாரனும், வேறொருவரும் இவரையும், தமிழ் சினிமாவையும்  கைபிடித்து இலக்கியத்துக்குள் கொண்டு வந்ததாகவும், சுஜாதாவை இவர் வற்புறுத்தி கைபிடித்து சினிமாவிற்கு கூட்டிவந்ததாகவும் சொன்னார்... தமிழுக்கும் சினிமாவிற்கும் இடையே பாலமாக நாம் தான் இருக்க வேண்டும் என்றார் (கடுப்பேத்துகிறார் யுவர் ஆனர்...) அப்போது தான் தமிழில் படம் வரும் என்றும், உலகம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்கும் என்றும் கூறினார்... (ஸ்ஸ்ஸ்... அப்பாடா...)

கமல் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்... தாங்களால் தயார் செய்து கொண்டு  வந்ததோ, தயார் செய்யாமல் வந்தோ பேச முடியாது என்கிற பட்சத்தில் தாங்கள் தங்களை விழாவிற்க்கு அழைக்க வருபவர்களிடம் வரமாட்டேன் என்று மறுத்துவிடுங்கள்... அது சாலச்சிறந்தது... அதை விடுத்து இப்படி உங்கள் பேச்சையும், அதன் வளமையையும் கேட்க‌ பெரும் ஆவலோடு வந்தவர்களை இப்படி ஏமாற்றாதீர்கள்... ஆம்லேட் சாப்பிட வந்தவர்களுக்கு ஆபாயில் கூட கொடுக்காமல் இப்படி ஆப் அடித்து, நோகடித்து வேக வைக்காதீர்கள்!

கூட்டத்தில் ஒரு ரசிகர் 'தலைவா... நீங்க தான் உலகத்துக்கே தலைவர்...' என்றபோது, 'ம்...ம்.... இதெல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு... ஆனா இத நான் நம்பி ஏமாரமாட்டேன்... கேட்டுகிட்டு தூக்கிப்போட்டுட்டு போயிட்டேயிருப்பேன்...' என்றார் கமல்... இதுதாங்க உங்ககிட்ட புடிச்ச விசயம் சகலகலா வல்லவரே!

1 comment:

மதார் said...

எழுத்துப்பிழை நிறைய உள்ளன மாற்றினால் நன்றாய் இருக்கும்

கண்கட்சி -கண்காட்சி ,புத்தகம் படிப்பதில் இருக்கும் காதல் எப்போது -எப்போதும் குறையாது, நன்கு -நான்கு வாங்கினால் ஒன்று இலவசம்...,காலிவாசி-கால்வாசி ,உச்சிக்கெ-உச்சிக்கே சென்றது,அனா -ஆனா இத நான் நம்பி ஏமாரமாட்டேன்... கெட்டுகிட்டு-கேட்டுகிட்டு



//2ஜி கார்ட் வாங்கினாலே அது எப்போதும் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருக்கும்.// இது சத்தியம்